திருப்புகழ் 842 நீல முகில் ஆன (கோடி .. குழகர் கோயில்)

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
நீலமுகி  லானகுழ  லானமட  வார்கள்தன 
நேயமதி  லேதினமு  ......  முழலாமல் 
நீடுபுவி  யாசைபொரு  ளாசைமரு  ளாகியலை 
நீரிலுழல்  மீனதென  ......  முயலாமற் 
காலனது  நாவரவ  வாயிலிடு  தேரையென 
காயமரு  வாவிவிழ  ......  அணுகாமுன் 
காதலுட  னோதுமடி  யார்களுட  னாடியொரு 
கால்முருக  வேளெனவு  ......  மருள்தாராய் 
சோலைபரண்  மீதுநிழ  லாகதினை  காவல்புரி 
தோகைகுற  மாதினுட  ......  னுறவாடிச் 
சோரனென  நாடிவரு  வார்கள்வன  வேடர்விழ 
சோதிகதிர்  வேலுருவு  ......  மயில்வீரா 
கோலவழல்  நீறுபுனை  யாதிசரு  வேசரொடு 
கூடிவிளை  யாடுமுமை  ......  தருசேயே 
கோடுமுக  வானைபிற  கானதுணை  வாகுழகர் 
கோடிநகர்  மேவிவளர்  ......  பெருமாளே. 
  • நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல்
    கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்களின் மார்பகத்தின் மேலுள்ள ஆசையால் நாள் தோறும் அலைச்சல் உறாமல்,
  • நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல்
    பெரிய மண்ணாசை, பொருள்கள் மேலுள்ள ஆசை இவற்றில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரில் அலைச்சல் உறுகின்ற மீனைப் போல உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல்,
  • காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன்
    யமனுடைய (என்னை) விரட்டும் பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக,
  • காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள் தாராய்
    அன்புடன் உன்னை ஓதுகின்ற அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேள் என்று நான் புகழுமாறு திருவருளைத் தந்தருளுக.
  • சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி தோகை குற மாதினுடன் உறவாடி
    (வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலையின் இடையே பரண் மீது நிழலில் நின்று, தினைப் புனத்தைக் காவல் செய்யும் மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவு கொண்டாடி,
  • சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ
    கள்வன் என்று உன்னைத் தேடி வந்தவர்களான காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ,
  • சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா
    மிக்க ஒளி வீசும் வேலைச் செலுத்திய மயில் வீரனே,
  • கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே
    அழகுள்ளதும், வினைகளை அழிப்பதில் நெருப்புப் போன்றதும் ஆகிய திருநீற்றை அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமா தேவியார் பெற்ற குழந்தையே,
  • கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே.
    தந்தத்தை முகத்தில் கொண்ட யானையாகிய கணபதிக்குப் பின்னர் தோன்றிய தம்பியே, குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி* என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com