திருப்புகழ் 841 நூலினை ஒத்த (வேதாரணியம்)

தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
தானன தத்த தனந்த ...... தனதான
நூலினை  யொத்த  மருங்குல்  தேரினை  யொத்த  நிதம்பம் 
நூபுர  மொய்த்த  பதங்கள்  ......  இவையாலும் 
நூறிசை  பெற்ற  பதங்கொள்  மேருவை  யொத்த  தனங்கள் 
நூல்வல்ம  லர்ப்பொ  ருதுண்டம்  ......  அவையாலும் 
சேலினை  யொத்தி  டுகண்க  ளாலும  ழைத்தி  டுபெண்கள் 
தேனிதழ்  பற்று  மொரின்ப  ......  வலைமூழ்கிச் 
சீலம  னைத்து  மொழிந்து  காமவி  தத்தி  லழுந்தி 
தேறுத  வத்தை  யிழந்து  ......  திரிவேனோ 
வாலஇ  ளப்பி  றைதும்பை  யாறுக  டுக்கை  கரந்தை 
வாசுகி  யைப்பு  னைநம்பர்  ......  தருசேயே 
மாவலி  யைச்சி  றைமண்ட  ஓரடி  யொட்டி  யளந்து 
வாளிப  ரப்பி  யிலங்கை  ......  யரசானோன் 
மேல்முடி  பத்து  மரிந்து  தோளிரு  பத்து  மரிந்து 
வீரமி  குத்த  முகுந்தன்  ......  மருகோனே 
மேவுதி  ருத்த  ணிசெந்தில்  நீள்பழ  நிக்கு  ளுகந்து 
வேதவ  னத்தி  லமர்ந்த  ......  பெருமாளே. 
  • நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும்
    நூல் போன்று நுண்ணிய இடை, தேருக்கு ஒப்பான பெண்குறித்தலம், சிலம்பு அணிந்த பாதங்கள் இவைகளாலும்,
  • நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர்ப் பொரு துண்டம் அவையாலும்
    நூல்களால் திசைகளில் புகழ் பெற்ற தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற மார்பகங்கள், தாமரை ஒத்த முகம் அவைகளாலும்,
  • சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு(ம்) பெண்கள் தேன் இதழ் பற்றும் ஒர் இன்ப வலை மூழ்கிச் சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ
    சேல் மீனை ஒத்திடும் கண்களாலும் (ஆடவர்களை) அழைக்கின்ற விலைமாதர்களின் தேன் போல் இனிக்கும் வாயிதழைப் பற்றி அனுபவிக்கின்ற ஒரு இன்ப வலையில் (நான்) மூழ்கி என்னுடைய ஆசாரங்கள் அனைத்தையும் ஒழியவிட்டு காம லீலைகளில் அழுந்தியவனாய், தேர்ந்து அடையத் தகும் தவ நிலையை இழந்து அலைச்சல் உறுவேனோ?
  • வால இளப் பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியைப் புனை நம்பர் தரு சேயே
    பால இளம் பிறைச் சந்திரன், தும்பைப்பூ, கங்கை நதி, கொன்றை, திருநீற்றுப் பச்சை, வாசுகி என்னும் பாம்பு இவைகளைப் புனைந்த சிவபெருமான் பெற்ற குழந்தையே,
  • மாவலியைச் சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே
    மகாபலிச் சக்கரவர்த்தி சிறையில் ஒடுங்க ஓர் அடியால் பேசிய பேச்சின் படி அளவிட்டும், அம்பைச் செலுத்தி இலங்கை அரசான ராவணனின் பத்துத் தலைகளையும் அரிந்தும் இருபது தோள்களையும் அரிந்தும் வீரம் மிக்கு நின்ற திருமாலின் மருகனே,
  • மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே.
    விரும்பத் தக்கத் திருத்தணி, திருச்செந்தூர், பெரிய பழனி இம்மூன்று தலங்களிலும் இன்புற்று இருந்து, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com