தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
தான தனத்தன தந்த ...... தனதான
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத்
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார்
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய்
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள கன்று ...... கணையாலேழ்
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.
- சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரிக்
குழல் கிண்டி அளி மூச
சேலையை உடுத்து ஒயிலாக நடந்தும், (கூந்தலிலுள்ள) மாலையை அவிழ்த்து முடிந்தும், குளிர்ந்த, நன்கு வாரிவிடப்பட்ட கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும், - தேனின் இனிக்க மொழிந்து காமுகரைச் சிறை கொண்டு
தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார்
தேனைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசியும், காமப் பித்து உடையாரை தம் வசப் படுத்தியும், இங்ஙனம் நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் கண்களை உடைய வேசியர்களின் - மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில்
அகப்பட நொந்து திரிவேனோ
இருண்ட மயக்கத்தில் விழுந்து, காம நூல்களைப் படித்து வருந்தி மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ? - வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை
தொலைத்திட உன்றன் அருள் தாராய்
இளஞ் சூரியனுடைய கிரணங்கள் என்று சொல்லும்படி விளங்கும் உனது திருவடிகள் என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்படி உன்னுடைய திருவருளைத் தந்து அருளுக. - பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார
மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் பார மரத் திரள் மங்க
வாலி உரத்தை இடந்து
பாலைவனத்தில் நடந்து, கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையை வதைத்து வென்று, பெரிய மலையாகிய சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி அப்பால் சென்று, தன் அம்பு கொண்டு ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து, - பால் வருணத் தலைவன் சொல் வழியாலே வேலை அடைத்து
வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள்
கொண்டல் மருகோனே
அப்பால் சென்று வருண ராஜன் சொன்னபடியே கடலில் அணை கட்டி, (அரக்கர்கள் வாழ்ந்திருந்த) சூழல்களை அழிவு செய்து, இலங்கை அரசாட்சியை விபீஷணருக்குக் கொடுத்த மேக நிறமுடைய ராமனாகிய திருமாலின் மருகனே, - மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே.
விரும்பத் தக்க திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய தலமாகிய பழநி ஆகிய இந்த மூன்று இடங்களிலும் பொருந்தி, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.