திருப்புகழ் 839 சூழும்வினை (வேதாரணியம்)

தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி  னைக்கட்  டுன்பநெ  டும்பிணி  ......  கழிகாமஞ் 
சோரமி  தற்குச்  சிந்தைநி  னைந்துறு  ......  துணையாதே 
ஏழையெ  னித்துக்  கங்களு  டன்தின  ......  முழல்வேனோ 
ஏதம  கற்றிச்  செம்பத  சிந்தனை  ......  தருவாயே 
ஆழிய  டைத்துத்  தங்கையி  லங்கையை  ......  யெழுநாளே 
ஆண்மைசெ  லுத்திக்  கொண்டக  ரும்புயல்  ......  மருகோனே 
வேழமு  கற்கு  தம்பியெ  னுந்திரு  ......  முருகோனே 
வேதவ  னத்திற்  சங்கரர்  தந்தருள்  ......  பெருமாளே. 
  • சூழும்வினைக் கட்டுன்ப
    என்னைச் சூழ்ந்த தீவினையின் காரணமாக ஏற்படும்
  • நெடும்பிணி கழிகாமஞ் சோரம் இதற்கு
    நீண்ட நோய், மிகுந்த காமம், களவு ஆகியவற்றையே
  • சிந்தை நினைந்து உறுதுணை யாதே
    மனத்தில் நினைவு கொண்டிருந்தால், எனக்கு வேறு உற்ற துணை யாது?
  • ஏழையென் இத்துக்கங்களுடன்
    ஏழையேன் ஆகிய யான் இத்தனை துக்கங்களுடன்
  • தினம் உழல்வேனோ
    நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ?
  • ஏதம் அகற்றிச் செம்பத
    இந்தக் குற்றத்தினை நீக்கி உன் செம்மையான பாதங்களை
  • சிந்தனை தருவாயே
    சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக.
  • ஆழியடைத்து
    சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து
  • இலங்கையை யெழுநாளே ஆண்மைசெலுத்தி தன்கைக் கொண்ட
    ஏழு நாளிலே இலங்கையின் மீது தனது ஆண்மையைச் செலுத்தி போரிட்டு தன் கையில் வசமாக்கிய
  • கரும்புயல் மருகோனே
    கரிய மேக வண்ணத்து அண்ணல் இராமனின் மருமகனே,
  • வேழமுகற்கு தம்பியெனுந் திரு முருகோனே
    யானைமுகத்துக் கணபதியின் தம்பி எனப்படும் திருமுருகனே,
  • வேதவனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.
    வேதாரணியத்தில்* அமர்ந்த சிவபிரான் தந்தருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com