தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர்தம திடமது
துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்
துவக்கி லேயடி படநறு மலரயன்
விதித்த தோதக வினையுறு தகவது
துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய்
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.
- தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க
முதலிலிருந்தே பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும், - வேறொரு பெயர் தமது இடம் அது துவட்சியே பெறில்
அவருடன் மருவிடு(ம்) பொது மாதர் துவக்கிலே அடி பட
வேறொருவர் இடத்தில் சமயம் கிடைக்கும்போது காம ஒழுக்கத்தில் ஈடுபட்டுச் சேரும் பொது மகளிர்களின் சிக்கலில் அகப்படும்படியாக, - நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் விதித்த துக்கம் தரும் தந்திரமான செயல்களால் நேரும் தீய ஒழுக்கத்தை ஒழிக்கவும், - நீறு இட அரகர என உ(ள்)ளம் அமையாதே
திரு நீற்றை இடவும், அரகர என்று கூறவும் என் உள்ளம் பொருந்தாதோ? - அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த
வாழ்வு இது சதம் என
உற்றார்களும், மனைவி, சகோதரிகளும், சுற்றத்தாரும், செல்வமும் (இவைகள் கூடிய) பெரிய வாழ்வாகிய இதனையே நிலைத்திருப்பது என்று, - மகிழ் உறும் அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர
எனக்குள்ளேயே மகிழ்கின்ற முட்டாள், வறிஞன் (ஆகிய எனது) வீணான வாழ்க்கை ஒழிய, - நின் அடியாரோடு அமர்த்தி மா மலர் கொ(ண்)டு வழி பட
எனை இருத்தியே
உனது அடியார்களுடன் ஒருவனாகச் சேர்த்து, நல்ல மலர்களைக் கொண்டு உன்னை வழிபட, என்னைத் தவ நிலையில் இருக்கச் செய்து, - பர கதி பெற மயில் மிசை அரத்த மா மணி அணி கழல்
இணை தொழ அருள் தாராய்
மேலான கதியை நான் அடைய, மயிலின் மீது ஏறி, சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள் அணிந்த உனது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவாயாக. - எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து
நீ எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்பது போல, எதிரே செலுத்தி - ராவணன் மணி முடி துணி பட எதிர்த்தும் ஓர் கணை விடல்
தெரி கரதலன் மருகோனே
ராவணனுடைய இரத்தின முடிகள் சிதறுமாறு எதிர்த்தும், ஒப்பற்ற அம்பைச் செலுத்தவும் வல்ல திருக்கரத்தை உடைய ராமனின் (திருமாலின்) மருகனே, - எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை
பகிரதி சிறு பிறை
வெள்ளெருக்கு மாலை, கழுநீரின் வாசனை உள்ள மலர், கொன்றை மாலை, கங்கை ஆறு, இளம்பிறை, - எலுப்பு மாலிகை புனை சடில் அவன் அருள் புதல்வோனே
எலும்பு மாலை (இவற்றை எல்லாம்) அணிந்த சடையை உடைய சிவபெருமானின் மகனே, - வடுத்த மா என நிலை பெறு நிருதனை அடக்க
பிஞ்சு விட்ட மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலை பெற்று நின்ற சூரனை அடக்கவும், - ஏழ் கடல் எழு வரை துகள் எழ
ஏழு கடல்களும் வற்ற, ஏழு மலைகளும் பொடியாக, - வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே
கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரத்தை உடையவனே, கஸ்தூரி அணிந்த திருப்புயங்களை உடையவனே, - வனத்தில் வாழ் குற மகள் முலை முழுகிய கடப்ப மாலிகை
அணி புய
காட்டில் வசிக்கின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பிலே முழுகிய கடப்ப மாலையை அணிந்த திருப்புயனே, - அமரர்கள் மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே.
தேவர்கள் மதிக்கின்ற வலிமையுள்ளவனே, வலிவலம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.