திருப்புகழ் 807 குங்கும கற்பூர (இஞ்சிகுடி)

தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற்  பூர  நாவி  யிமசல 
சந்தனகத்  தூரி  லேப  பரிமள 
கொங்கைதனைக்  கோலி  நீடு  முகபட  ......  நகரேகை 
கொண்டைதனைக்  கோதி  வாரி  வகைவகை 
துங்கமுடித்  தால  கால  மெனவடல் 
கொண்டவிடப்  பார்வை  காதி  னெதிர்பொரு  ......  மமுதேயாம் 
அங்குளநிட்  டூர  மாய  விழிகொடு 
வஞ்சமனத்  தாசை  கூறி  யெவரையு 
மன்புடைமெய்க்  கோல  ராக  விரகினி  ......  லுறவாடி 
அன்றளவுக்  கான  காசு  பொருள்கவர் 
மங்கையர்பொய்க்  காதல்  மோக  வலைவிழ 
லன்றியுனைப்  பாடி  வீடு  புகுவது  ......  மொருநாளே 
சங்கதசக்  ரீவ  னோடு  சொலவள 
மிண்டுசெயப்  போன  வாயு  சுதனொடு 
சம்பவசுக்  ரீவ  னாதி  யெழுபது  ......  வெளமாகச் 
சண்டகவிச்  சேனை  யால்மு  னலைகடல் 
குன்றிலடைத்  தேறி  மோச  நிசிசரர் 
தங்கிளைகெட்  டோட  ஏவு  சரபதி  ......  மருகோனே 
எங்குநினைப்  போர்கள்  நேச  சரவண 
சிந்துரகர்ப்  பூர  ஆறு  முககுக 
எந்தனுடைச்  சாமி  நாத  வயலியி  ......  லுறைவேலா 
இன்புறுபொற்  கூட  மாட  நவமணி 
மண்டபவித்  தார  வீதி  புடைவளர் 
இஞ்சிகுடிப்  பார்வ  தீச  ரருளிய  ......  பெருமாளே. 
  • குங்கும கற்பூற நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள கொங்கை தனைக் கோலி நீடு முக பட(ம்) நகரேகை
    குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுச் சட்டம், பன்னீர், சந்தனம், கஸ்தூரி (இவைகளின்) பூசுகையால் நறுமணம் கொண்டதும், நகரேகை கொண்டவையுமான மார்பகங்கள் வளையும்படி பெரிய ரவிக்கை, மேலாடை முதலியவற்றை அணிந்து,
  • கொண்டை தனைக் கோதி வாரி வகை வகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் கொண்ட விடப் பார்வை காதின் எதிர் பொரும் அமுதேயாம் அங்கு உ(ள்)ள நிட்டூர மாய விழி கொடு
    கூந்தலைச் சீவி வாரி வித விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷத்தைப்போல வலிமை கொண்ட நஞ்சை ஒத்த (கண்) காதின் எதிரில் போய் சண்டை இடும் அமுதம் போன்றதும், அங்கு உள்ள கொடுமை வாய்ந்ததுமான மாய சக்தி வாய்ந்த கண்ணைக் கொண்டு,
  • வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும் அன்பு உடை மெய்க் கோல ராக விரகினில் உறவாடி
    (உள்ளே) வஞ்சக மனத்துடனும், (புறத்தே) அன்பு மொழிகளைப் பேசியும் (சந்தித்த) எத்தகையவருடனும் அன்பு காட்டி, மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசை கூடிய சாமர்த்தியத்துடன் மொழிகளைப் பேசிச் சல்லாபித்து,
  • அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய்க் காதல் மோக வலை விழல் அன்றி உனைப் பாடி வீடு புகுவதும் ஒரு நாளே
    அன்றைய பொழுதுக்கான கைக்காசை அபகரிக்கும் விலைமாதர்களின் பொய்யன்பாகிய காம வலையில் விழுதல் இல்லாமல், உன்னைப் பாடி மோட்ச வீட்டில் புகும்படியான ஒரு நாள் எனக்குக் கிட்டாதோ?
  • சங்க(ம்) தசக்ரீவனோடு சொல வள(ம்) மிண்டு செயப்போன வாயு சுதனொடு சம்பவ சுக்ரீவன் ஆதி எழுபது வெ(ள்)ளமாக
    கொத்தான பத்துத் தலைகளை உடைய ராவணனுடன் தூது செல்வதற்கு வேண்டிய சொல் வளம் முதலிய ஆற்றல் கொண்டு வீரச் செயல்கள் செய்வதற்குச் சென்ற வாயுவின் மகனான அனுமனோடு, ஜாம்பவான், சுக்ரீவன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன்
  • சண்ட கவிச் சேனையால் முன் அலை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே
    வலிமை வாய்ந்த குரங்குப் படையால் முன்பு, அலைகின்ற கடலை சிறு மலைகள் கொண்டு அணைகட்டி (அக்கரையில் உள்ள இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அரக்கர்களுடைய சுற்றம் அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட ராமனின் மருகனே,
  • எங்கு நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறு முக குக எந்தனுடைச் சாமி நாத வயலியில் உறைவேலா
    எங்கு வாழ்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் நேசனே, சரவணனே, செம்பொடி பச்சைக் கற்புரம் (இவை அணிந்துள்ள) ஆறுமுகனே, குகனே, அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே, வயலூரில் வாழும் வேலனே,
  • இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் இஞ்சி குடிப் பார்வதி ஈசர் அருளிய பெருமாளே.
    இன்பம் தரத் தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்தினங்கள், மண்டபங்கள், அகண்ட தெருக்களில் பக்கத்திலே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com