திருப்புகழ் 806 காதோடு தோடிகலி (திருமாகாளம்)

தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு  தோடிகலி  யாடவிழி  வாள்சுழல 
கோலாக  லாரமுலை  மார்புதைய  பூணகல 
காரோடு  கூடளக  பாரமல  ரோடலைய  ......  அணைமீதே 
காலோடு  காலிகலி  யாடபரி  நூபுரமொ 
டேகாச  மானவுடை  வீசியிடை  நூல்துவள 
காவீர  மானஇத  ழூறல்தர  நேரமென  ......  மிடறோதை 
நாதான  கீதகுயில்  போலஅல்குல்  மால்புரள 
மார்போடு  தோள்கரமொ  டாடிமிக  நாணழிய 
நானாவி  நோதமுற  மாதரொடு  கூடிமயல்  ......  படுவேனை 
நானாரு  நீயெவனெ  னாமலென  தாவிகவர் 
சீர்பாத  மேகவலை  யாயுமுன  வேநிதமு 
நாதாகு  மாரமுரு  காஎனவு  மோதஅருள்  ......  புரிவாயே 
பாதாள  சேடனுட  லாயிரப  ணாமகுட 
மாமேரொ  டேழுகட  லோதமலை  சூரருடல் 
பாழாக  தூளிவிணி  லேறபுவி  வாழவிடு  ......  சுடர்வேலா 
பாலாழி  மீதரவின்  மேல்திருவொ  டேயமளி 
சேர்நீல  ரூபன்வலி  ராவணகு  ழாமிரிய 
பாரேவை  யேவியமு  ராரியைவர்  தோழனரி  ......  மருகோனே 
மாதாபு  ராரிசுக  வாரிபரை  நாரியுமை 
ஆகாச  ரூபியபி  ராமிவல  மேவுசிவன் 
மாடேறி  யாடுமொரு  நாதன்மகிழ்  போதமருள்  ......  குருநாதா 
வானோர்க  ளீசன்மயி  லோடுகுற  மாதுமண 
வாளாகு  காகுமர  மாமயிலின்  மீதுதிரு 
மாகாள  மாநகரில்  மாலொடடி  யார்பரவு  ......  பெருமாளே. 
  • காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல காரோடு கூட அளக பார(ம்) மலரோடு அலைய
    காதில் உள்ள தோடுடன் விரோதித்துப் பாயும் கண்கள் வாள் போலச் சுழல, ஆடம்பரமான முத்து மாலை அணிந்த தனங்கள் மார்பை மறைக்க, ஆபரணங்கள் அகன்று போக, மேகம் போன்ற கூந்தல் பாரம் மலர்களுடன் அலைய,
  • அணை மீதே காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள
    படுக்கையின் மேல் காலுடன் கால் பின்னி அசைய, தரித்துள்ள சிலம்புடன் மேலே அணிந்துள்ள புடவை வீசப்பட்டு, நூல் போன்ற இடை துவண்டு போக,
  • காவீரமான இதழ் ஊறல் தர நேர(ய)ம் என மிட(ற்)று ஓதை நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய
    செவ்வலரி போலச் சிவந்த வாயிதழ் ஊறலைக் கொடுக்க, அன்பு காட்டுவது போல கண்டத்தின் ஒலி (நாதமான) இனிய கீதம் போல் ஒலிக்கும் குயில் போல் விளங்க, பெண்குறியில் பரவச மயக்கம் ஏற்பட, மார்பும், தோளும், கையும் ஒன்றோடொன்று பிணைபட்டு ஆடி மிகவும் நாணம் கெட்டொழிய,
  • நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை
    பலவித வினோதங்களை அனுபவித்து பெண்களோடு கூடி மோக மயக்கம் கொள்கின்ற என்னை,
  • நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உ(ன்)னவே நிதமு(ம்) நாதா குமார முருகா எனவும் ஓத அருள் புரிவாயே
    நான் யார், நீ எவன் என்று எண்ணாமல், என்னுடைய உயிரை வசீகரிக்கின்ற உனது சீரிய திருவடியின் தியானமே எனக்குள்ள கவலையாகவும், (உன்னைத்) துதிக்கவும், நாள்தோறும் நாதா, குமாரா, முருகா என்று ஓதவும் திருவருளைத் தந்து அருளுக.
  • பாதாள சேடன் உடல் ஆயிர(ம்) பணா மகுட(ம்) மா மேரு ஒடே ஏழு கடல் ஓத(ம்) மலை சூரர் உடல் பாழாக தூளி வி(ண்)ணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா
    பாதாளத்தில் உள்ள ஆதிசேஷனுடைய உடல், ஆயிரம் படங்களாகிய மகுடங்கள், மகா மேரு இவைகளுடன், ஏழு கடல்களின் வெள்ளம், கிரெளஞ்ச மலை, சூரர்களுடைய உடல் (இவை எல்லாம்) பாழ்பட, பொடிபட்ட தூள் விண்ணிலே போய்ப் படிய, உலகை வாழச் செலுத்தின ஒளி வேலனே,
  • பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவண குழாம் இரிய பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே
    திருப்பாற் கடலில் பாம்பின் மேல் லக்ஷ்மியுடன் படுக்கை கொண்ட நீல நிறத்துத் திருமால், வலிமை வாய்ந்த ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஓடி விலக பூமியில் அம்பைச் செலுத்தின (ராமனும்), முராசுரனுடைய பகைவனும், பஞ்ச பாண்டவர் ஐவரின் தோழனுமாகிய (கண்ணனாகிய) திருமாலின் மருகோனே,
  • மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா
    அன்னை, திரிபுரத்தை எரித்தவள், சுகக் கடல், பரதேவதை, பெண்ணரசி உமா தேவி, ஆகாச சொரூபி, அழகி (ஆகிய பார்வதியின்) வலப் பால் உள்ள சிவ பெருமான், ரிஷப வாகனத்தின் மேல் நடனம் செய்யும் ஒப்பற்ற தலைவனுக்கு மகிழும்படியான ஞானப் பொருளை உபதேசித்து அருளிய குரு மூர்த்தியே,
  • வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர
    தேவேந்திரன் வளர்த்த மயில் போன்ற தேவயானையுடன் குறப் பெண் வள்ளியை மணந்த மணவாளனே, குகனே, குமரனே,
  • மா மயிலின் மீது திரு மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே.
    சிறந்த மயிலின் மேல் திருமாகாள* மா நகரில் ஆசையுடன் அமர்ந்து, அடியார்கள் பரவி வழிபடும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com