திருப்புகழ் 790 ஈளை சுரங்குளிர் (பாகை)

தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
ஈளை  சுரங்குளிர்  வாத  மெனும்பல 
நோய்கள்  வளைந்தற  ......  இளையாதே 
ஈடு  படுஞ்சிறு  கூடு  புகுந்திடு 
காடு  பயின்றுயி  ......  ரிழவாதே 
மூளை  யெலும்புகள்  நாடி  நரம்புகள் 
வேறு  படுந்தழல்  ......  முழுகாதே 
மூல  மெனுஞ்சிவ  யோக  பதந்தனில் 
வாழ்வு  பெறும்படி  ......  மொழிவாயே 
வாளை  நெருங்கிய  வாவியி  லுங்கயல் 
சேல்கள்  மறிந்திட  ......  வலைபீறா 
வாகை  துதைந்தணி  கேதகை  மங்கிட 
மோதி  வெகுண்டிள  ......  மதிதோயும் 
பாளை  நறுங்கமழ்  பூக  வனந்தலை 
சாடி  நெடுங்கடல்  ......  கழிபாயும் 
பாகை  வளம்பதி  மேவி  வளஞ்செறி 
தோகை  விரும்பிய  ......  பெருமாளே. 
  • ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள்
    கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள்
  • வளைந்தற இளையாதே
    என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல்,
  • ஈடுபடுஞ் சிறு கூடு புகுந்து
    வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து
  • இடுகாடு பயின்று உயிர் இழவாதே
    சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல்,
  • மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
    மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள்
  • வேறு படுந்தழல் முழுகாதே
    இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல்,
  • மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
    மூலப்பொருளான சிவயோக பதவியில்
  • வாழ்வு பெறும்படி மொழிவாயே
    நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக.
  • வாளை நெருங்கிய வாவியிலும்
    வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும்
  • கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா
    கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி, வலைகளைக் கிழித்து,
  • வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு
    வெற்றி கொண்டாடி, வரிசையாக இருந்த தாழம்பூக்கள் உருக்குலையும்படி அவற்றை மோதிக் கோபிக்க,
  • இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம்
    பிறைச்சந்திரன் படியும் உயரமான பாளைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில்
  • தலைசாடி நெடுங்கடல் கழிபாயும்
    அந்த மீன்கள் உச்சியில் சாடி, பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும்,
  • பாகை வளம்பதி மேவி
    பாகை* என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து,
  • வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே.
    வளப்பம் நிறைந்த தோகைமயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com