தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென் ...... றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின் ...... றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளும் ...... தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங் ...... குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
கோல மாமயி லேறும் ...... பெருமாளே.
- ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து
காம லீலைகளை விளைவிக்கும் சிறந்த மன்மதன் காமப் போரில் செலுத்தும் (மலர்ப்) பாணங்களால் மனம் நொந்து, - ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே
உடல் வேர்வை வர மோகம் கொண்டு தளராமலும், - ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று
ஆயு(ள்) வேதனையே என்று உலையாதே
முத்துப் போன்ற ஒளி வீசும் பற்களை உடைய விலைமாதரது சிவந்த சேல் மீன் போன்ற கண்களின் கட்டளைப்படி கீழ்ப்படிந்து ஆயுட் காலம் வரையில் துன்பமே என்னும்படி நிலை குலையாமலும், - சேடன் மா முடி மேவும் பார் உ(ள்)ளோர்களுள் நீடும்
த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
ஆதிசேஷனின் பெரிய பணாமுடியின் மேல் தாங்கப்படுகின்ற இந்தப் பூமியில் உள்ளவர்களுள் பெரிய கொடை வள்ளல்கள் யார் யார் என்று தேடி அலையாமலும், - தேடி நான் மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக
நான் இன்று அடைவேனோ
நான்கு வேதங்களும் தேடி நாடுகின்றனவும், (வள்ளியைத் தேடிக்) காட்டில் ஓடி அலைந்தனவுமான உனது திருவடிகளை தேவ நாயகனே, யான் என்று அடையப் பெறுவேனோ? - பாடு நான் மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவை
பாகனும் நாளும் தவறாதே
நான்கு வேதங்களும் பாடுகின்ற பிரமனும், (அவனுக்குத்) தகப்பனாகிய திருமாலும், பார்வதி என்ற பெண்ணொரு பாகனாம் சிவபெருமானும், நாள் தோறும் தவறாமல், - பாக நாள் மலர் சூடும் சேகரா
பக்குவமாக அன்று அலர்ந்த மலர்களைச் சூட்டுகின்ற திருமுடியை உடையவனே, - மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா
கோட்டை மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை* நகரில் வீற்றிருக்கும் குமரேசனே, - கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு(ம்)
நாவல மேவும் தமிழ் வீரா
மதுரைப் பதி அரசனின் (கூன் பாண்டியனின்) கூன் அன்று தொலையும்படி, (சமணரோடு) வாதம் செய்த, உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை மிக்க தமிழ் வீரனே, - கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா
மயில் ஏறும் பெருமாளே.
பல கோடி அசுரர்கள் கைகளும் கால்களும் அற்று விழும்படியாக, வெற்றி உலாச் செய்யும் அழகிய சிறந்த மயில் ஏறும் பெருமாளே.