திருப்புகழ் 788 அமுதினை மெத்த (மாயூரம்)

தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை  மெத்தச்  சொரிந்து  மாவின 
தினியப  ழத்தைப்  பிழிந்து  பானற 
வதனொடு  தித்தித்  தகண்ட  ளாவிய  ......  விதழாராய் 
அழகிய  பொற்றட்  டினொண்டு  வேடையின் 
வருபசி  யர்க்குற்  றவன்பி  னாலுண 
வருள்பவ  ரொத்துத்  தளர்ந்த  காமுகர்  ......  மயல்தீரக் 
குமுதம்  விளர்க்கத்  தடங்கு  லாவிய 
நிலவெழு  முத்தைப்  புனைந்த  பாரிய 
குலவிய  சித்ரப்  ப்ரசண்ட  பூரண  ......  தனபாரக் 
குவடிள  கக்கட்  டியுந்தி  மேல்விழு 
மவர்மய  லிற்புக்  கழிந்த  பாவியை 
குரைகழல்  பற்றிப்  புகழ்ந்து  வாழ்வுற  ......  அருள்வாயே 
வமிசமி  குத்துப்  ப்ரபஞ்சம்  யாவையு 
மறுகிட  வுக்ரக்  கொடும்பை  யானபுன் 
மதிகொட  ழித்திட்  டிடும்பை  ராவணன்  ......  மதியாமே 
மறுவறு  கற்பிற்  சிறந்த  சீதையை 
விதனம்வி  ளைக்கக்  குரங்கி  னாலவன் 
வமிச  மறுத்திட்  டிலங்கு  மாயவன்  ......  மருகோனே 
எமதும  லத்தைக்  களைந்து  பாடென 
அருளஅ  தற்குப்  புகழ்ந்து  பாடிய 
இயல்கவி  மெச்சிட்  டுயர்ந்த  பேறருள்  ......  முருகோனே 
எழில்வளை  மிக்கத்  தவழ்ந்து  லாவிய 
பொனிநதி  தெற்கிற்  றிகழ்ந்து  மேவிய 
இணையிலி  ரத்னச்  சிகண்டி  யூருறை  ......  பெருமாளே. 
  • அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது இனிய பழத்தைப் பிழிந்து பால் நறவு அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய்
    அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து, பாலும் அதனுடன் தேனையும் கலந்து கூட்டி, (அவையுடன்) தித்திக்கின்ற கற்கண்டையும் கலந்த அத்தனை சுவையுள்ள வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய்,
  • அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையின் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு அருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர் மயல் தீர
    அழகான பொன் தட்டில் மொண்டு, காம நோயுடன் வருகின்ற மோகப் பசி உள்ளவர்கள் மேல் வைத்த அன்பினால் (அவர்கள்) உண்ணும்படி கொடுப்பவர்கள் போன்று இளைப்புள்ள காமிகளின் மோக மயக்கம் நீங்க,
  • குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தன பாரக் குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும்
    (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற
  • அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வு உற அருள்வாயே
    அந்த விலைமாதர்களின் மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.
  • வமிசம் மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ரக் கொடும்பையான புன் மதி கொடு அழித்திட்டு இடும்பை ராவணன் மதியாமே
    தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கமுற, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் சற்றும் பொருட்படுத்தாமல்,
  • மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்கக் குரங்கினால் அவன் வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே
    குற்றம் அற்ற, கற்பில் மேம்பட்ட சீதைக்கு துக்கம் விளைவிக்க, குரங்குகளின் சேனையின் உதவியைக் கொண்டு அவனுடைய குலத்தை அறுத்து விளங்கும் (ராமனாம்) திருமாலின் மருகனே,
  • எமது மலத்தைக் களைந்து பாடு என அருள அதற்குப் புகழ்ந்து பாடிய இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே
    என்னுடைய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களையும் நீக்கி, பாடுவாயாக என்று நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன் படியே உன்னைப் புகழ்ந்து உழுவலன்புடன் பாடிய பாடல்களை விரும்பி மேலான பேற்றினை எனக்கு அருளிய முருகனே,
  • எழில் வளை மிக்கத் தவழ்ந்து உலாவிய பொ(ன்)னி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய இணை இலி ரத்னச் சிகண்டி ஊர் உறை பெருமாளே.
    அழகிய சங்கு நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் விளங்குகின்ற, ஒப்பு இல்லாத, ரத்தினமயமான மயிலாடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com