திருப்புகழ் 785 ஏட்டின் விதிப்படி (திருக்கடவூர்)

தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின்  விதிப்படி  யேகொடு  மாபுர 
வீட்டி  லடைத்திசை  வேகசை  மூணதி 
லேற்றி  யடித்திட  வேகட  லோடம  ......  தெனவேகி 
ஏற்கு  மெனப்பொரு  ளாசைபெ  ணாசைகொ 
ளாத்து  வெனத்திரி  யாபரி  யாதவ 
மேற்றி  யிருப்பிட  மேயறி  யாமலு  ......  முடல்பேணிப் 
பூட்டு  சரப்பளி  யேமத  னாமென 
ஆட்டி  யசைத்திய  லேதிரி  நாளையில் 
பூத்த  மலக்குகை  யோபொதி  சோறென  ......  கழுகாகம் 
போற்றி  நமக்கிரை  யாமென  வேகொள 
நாட்டி  லொடுக்கென  வேவிழு  போதினில் 
பூட்டு  பணிப்பத  மாமயி  லாவருள்  ......  புரிவாயே 
வீட்டி  லடைத்தெரி  யேயிடு  பாதக 
னாட்டை  விடுத்திட  வேபல  சூதினில் 
வீழ்த்த  விதிப்படி  யேகுரு  காவலர்  ......  வனமேபோய் 
வேற்றுமை  யுற்றுரு  வோடியல்  நாளது 
பார்த்து  முடித்திட  வேயொரு  பாரத 
மேற்புனை  வித்தம  காவிர  மாயவன்  ......  மருகோனே 
கோட்டை  யழித்தசு  ரார்பதி  கோவென 
மூட்டி  யெரித்தப  ராபர  சேகர 
கோத்த  மணிக்கதி  ரேநிக  ராகிய  ......  வடிவேலா 
கூற்று  மரித்திட  வேயுதை  பார்வதி 
யார்க்கு  மினித்தபெ  ணாகிய  மான்மகள் 
கோட்டு  முலைக்கதி  பாகட  வூருறை  ......  பெருமாளே. 
  • ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு மா புர வீட்டில் அடைத்து
    பிரமனது ஓலையில் கண்ட விதியின்படி, (இந்த உயிரைக்) கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து,
  • இசைவே கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே
    பொருந்தும்படியாக (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும்)* மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த,
  • கடல் ஓடம் அது என ஏகி
    கடலில் படகு ஓடுவது போலத் தடுமாறி காலம் கழித்து,
  • ஏற்கும் எனப் பொருள் ஆசை பெ(ண்)ணாசை கொளாது என திரியா பரியா
    நல்லது என்று நினைத்து பொன், பெண் ஆகிய ஆசைகளை மேற்கொண்டு, தூ எனப் பலர் இகழத் திரிந்தும், வருந்தியும்,
  • தவம் ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
    தவம் சேர்ந்துள்ள இடமே எங்கிருக்கின்றது என்று தெரியாமலும், இந்த உடலை விரும்பிப் பாதுகாத்து,
  • பூட்டு சரப்பளியே மதனாம் என
    வைரம் அழுத்தமாகப் பதித்த கழுத்தணி விளங்க, மன்மதன் இவன் என்னும்படி,
  • ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
    உடலை ஆட்டியும் அசைத்தும் இயல்பாகத் திரியும் காலத்தில்,
  • பூத்த மலக் குகையோ பொதி சோறோ என
    நிரம்பின மலம் சேர்ந்த குகையோ, அல்லது சோற்றுப் பொதியோ இந்த உடல் என்னும்படி,
  • கழு காகம் போற்றி நமக்கு இரையாம் எனவே கொள
    கழுகும் காகமும் விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள்ளும்படி,
  • நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
    பூமியில் யாவும் அடங்கியாயிற்று என்று (இவ்வுடல்) விழுகின்ற, இறந்து போகும் அந்தச் சமயத்தில்
  • பூட்டு பணி பத மா மயிலா அருள் புரிவாயே
    கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக.
  • வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன்
    (அரக்கு) மாளிகையில் (பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்து, நெருப்பை இட்ட பாதகனாகிய துரியோதனன்
  • நாட்டை விடுத்திடவே பல சூதினில் வீழ்த்த
    நாட்டை விட்டுப் போகும்படி பல சூதாட்டங்களில் தோற்கடிக்க,
  • விதிப்படியே குரு காவலர் வனமே போய்
    விதியின்படி குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று,
  • வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே
    மாறு வேடம் பூண்டு அஞ்ஞாத வாசம் செய்திருந்த நாளின் முடிவைப் பார்த்து, வனவாசம் முடிந்திடவே,
  • ஒரு பாரத மேற் புனைவித்த மகா விர மாயவன் மருகோனே
    ஒரு பாரதப் போரையே மேலே நடக்கும்படித் துவக்கிவைத்த பெரிய வீரனாகிய திருமாலின் மருகனே,
  • கோட்டை அழித்த அசுரர் பதி கோ என
    (சூரனது மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து, அசுரர்களின் தலைவனான சூரன் கோ என்று கூச்சலிட
  • மூட்டி எரித்த பராபர சேகர
    (அவனுடைய நகரத்தை) நெருப்பு மூட்டி எரித்த பராபரப் பொருளே, அழகனே,
  • கோத்த மணிக் கதிரே நிகராகிய வடிவேலா
    கோக்கப்பட்ட இரத்தின ஒளிக்கு நிகரான கூரிய வேலனே,
  • கூற்று மரித்திடவே உதை பார்வதியார்க்கும்
    யமன் இறந்து போகும்படியாக (இடது காலால்) உதைத்த பார்வதி தேவியார்க்கும்
  • இனித்த பெ(ண்)ணாகிய மான் மகள்
    இனிமை தரும் பெண்ணாகிய, மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின்
  • கோட்டு முலைக்கு அதிபா
    மலை போன்ற மார்பகங்களுக்கு உரிய தலைவனே,
  • கடவூர் உறை பெருமாளே.
    திருக்கடவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com