தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன ...... தனதான
மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ...... மளமேற
மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.
- மேக வார் குழல் அது ஆட தன பார(ம்) மிசை ஆரம் ஆட
குழை ஆட விழி ஆட பொறி மேனி வாசனைகள் வீச அல்குல்
மோதி பரிமளம் ஏற
மேகம் போல் கறுத்து நீண்ட கூந்தல் ஆடவும், மார்பின் பாரங்களின் மேல் முத்து மாலை ஆடவும், காதில் குண்டலங்கள் ஆடவும், கண்கள் ஆடவும், பொலிவு பரந்துள்ள உடல் நறு மணங்கள் வீசவும், பெண்குறியின் மேற்பட்டு நல்ல மணம் அதிகரிக்கவும், - மீ(மி)ன் நூல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்
ஓலம் என பாத மணி நூபுரமு(ம்) மேல் வில் வீச பணி கீர
குயில் போல குரல் முழவு ஓசை ஆகவே அவைகள்
கூடிடுவர்
ஒளி வீசும் நூலாடை இடையில் ஆடவும், மயிலைப் போல நடை நடக்க, பாதத்தில் உள்ள ரத்தினச் சிலம்பு ஓலம் ஓலம் என்று முறையிடும் ஒலியுடன் சப்திக்க, ஒளியை ஆபரணங்கள் வீச, பால் போலவும் குயில் போலவும், முரசொலி போலவும் ஒலி பெருகவே சபையில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். - வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி ஆசை
போல மனையே கொ(ண்)டு அணைவார்கள்
தெருவில் வரும் ஆடவர்களை வாருங்கள் என்று நயமுடன் இனிய வார்த்தைகள் சொல்லி, மன உருக்கத்துடன் ஆசை பூண்டவர்கள் போல தங்களுடைய வீட்டிற்குக் கொண்டு போய் தழுவுவார்கள். - குவடு அதி பார ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு
வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான சூலை பல
நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ
காமத்துக்கு ஆதாரமாயுள்ள அழகுள்ள மார்பகத்தில் முழுகி, சுகக் கடலில் அனுபவித்து வேர்வை பாய படுக்கையில் கோலாகலத்துடன் இன்பம் அனுபவிக்க, (அதனால் பின்னர்) வருத்தம் தருவதான சூலை நோய் மற்றும் பல நோய்களாகிய கடலில் சிக்கி வேதனைப் பட்டு இந்த உடலுடன் அலைவேனோ? - நாக லோகர் மதி லோகர் பக(ல்) லோகர் விதி நாடுளோர்கள்
அமரோர்கள் கண நாதர் விடை நாதர் வேதியர்கள் ஆதி
சரசோதி திகழ் முநிவோர்கள்
நாக லோகத்தில் உள்ளவர்கள், சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள், சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள், பிரம லோகத்தில் இருப்பவர்கள், தேவர்கள், கணநாதர்கள், நந்திகண நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோக மார்க்கத்தில் ஏற்படும் ஜோதி விளங்கும் முனிவர்கள், - நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை
இது பூரை எனநாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும்
வேலா
நவ நாத சித்தர்கள், மனிதர்கள், நிலை பெற்ற நாராயண மூர்த்திகள், பதினெண் புராணங்கள், வேதங்களின் ஒலிகள் எல்லாம் இதுவே (அசுரர்களின்) முடிவு காலம், இதுவே முடிவு காலம் என்று சொல்ல, அசுரர் அழிந்து போக, அவர்கள் இருந்த கிரவுஞ்ச கிரி பொடிபடச் செலுத்திய வேலனே, - தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது
வ(ள்)ளி நாயகி மி(ன்)னாளை சுக சோகமோடு இறுகி மார்
முலை விடாமல் அணை புணர்வோனே
மயில் போன்ற மாது, குற மாது, அமுத வல்லி எனப் பெயர் பூண்டிருந்த தேவயானையின் நல்ல துணையாய் அமைந்த மாது, வள்ளி நாயகி என்கின்ற மின்னொளி போன்றவளை சுகத்துடனும் விரக தாபத்துடனும் அழுந்தக் கட்டி, உனது மார்பில் அவளுடைய மார்பகத்தை விடாமல் அணைத்துத் தழுவியவனே, - தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது
எ(ஏ)ய்வான வடிவா தொழுது எ(ண்)ணா வயனர் சூழு
காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே.
பன்னிரண்டு தோள்களும், ஆறு திருமுகங்களும், மயில், வேல், இவைகளின் அழகுக்கு மேம்பட்டுப் பொருந்தியுள்ள எழில் வடிவம் உள்ளவனே, தொழுது வணங்கி ஜடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினரும், காவிரி ஆறும் சூழ்ந்து பரவும் புள்ளிருக்கும் வேளூர் என்ற வைத்தீசுரன் கோயிலில் வீற்றிருக்கும் முருகா, தேவர்களின் பெருமாளே.