தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன ...... தனதானா
மூலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே
மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர
மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல்
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர
வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய்
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந்
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் சூரரை வாட்டி யந்தகன்
வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே
வேதா நால்தலை சீக்கொ ளும்படி
கோலா காலம தாட்டு மந்திர
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.
- மூல ஆதாரமோடு ஏற்றி அங்கியை ஆறு ஆதாரமோடு
ஓட்டி
மூலாதார* கமலத்தில் அக்கினியை ஏற்றி, ஆறு ஆதாரங்களிலும் செல்லும்படி ஓட்டிச் செலுத்தி, - யந்திர மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே
ஆதார இயந்திரங்களின் வழியாக பிரதானமான பிராண வாயுவை நல்ல சுழி முனை** நாடியின் வழியே ஓடச் செய்து, - மூதாதார மருப்பில் அந்தர
முதல் ஆதாரமான ஆஞ்ஞை ஆதாரத்தின் பிறைச் சந்திர வடிவின் கோட்டில் (புருவத்தின் மத்தி இடமாகிய) ஆகாச நிலையில் - நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் ஊடே பால் ஒளி
ஆத்துமன் தனை விலகாமல்
இசைத் தொனிகள் ஒலி செய்யும் மேலான இடத்தில் (பிரமரந்திர நிலையில்) ஒளித்து நிற்கும் ஜீவாத்மாவை தவறிப் போகாத வழியில் - மால் ஆடு ஊனோடு சேர்த்தி இதம் பெற
ஆசை ஊடாடும் இந்த உடலில் ஈடுபட வைத்து இன்பம் பெருக, - நானா வேத ம(மா) சாத்திரம் சொல்லும்
பலவகையான வேதங்களும் சிறந்த சாத்திர நூல்களும் சொல்லிப் புகழும் - வாழ் ஞானா புரி ஏற்றி மந்திர தவிசு ஊடே
தழைத்த ஞான நிலையில் (துவாத சாந்த வெளியில்) ஏற்றி (ஐந்தெழுத்தாகிய) மந்திர பீடத்தினிடையே - மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூண் ஒளி காட்டி
பார்வதியும் சிவபெருமானும் வீற்றிருந்து அருளும் திருச்சபையில் (அக்கினி, சூரியன், சந்திரன் என்னும்) முச்சுடர்களின் ஒளியை தரிசிக்கச் செய்து, - சந்திர வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன்
ஆள்வாய்
அங்கே சந்திரக்கலையின் தேன் அமுதம் பொங்கி எழ அதனை எனக்கு ஊட்டி என்னை உடனிருந்து ஆண்டருள்க. - சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி
சூலாயுதத்தை உடைய மாது, உமாதேவி, அருள் பொழியும் சம்புவின் மனைவி, - மாதா ரா பகல் காத்து அமைந்த அ(ன்)னை
தாய், இரவும் பகலும் காத்து அமைந்த அன்னை, - சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும்
தூயாள்
சுடுகின்றபடி நம்மை ஈர்த்துச் செல்லும் வினைகளை வாட்டித் தொலைத்து, குழந்தைகளைக் காப்பது போல் நம்மைக் காத்து அருளுகின்ற பரிசுத்த தேவதை, - மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த
சங்கரர்
பிரமன், திருமால், ருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் நிலைநாட்டிய எம்பெருமான் வைத்தீசுரன் கோயிலில் வாழ்கின்ற வைத்திய நாதராய் பல வினைகளைத் தீர்க்கும் சிவபெருமான் என்னும் - தோய் சாரூபரொடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா வேலா
உருவத் திருமேனி கொண்டவர் பாகத்தில் பொருந்தி இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய குழந்தையாகிய வேலனே, - ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி
எழு கடலையும் வற்றச் செய்து, வஞ்சகம் நிறைந்த மூடர்களாகிய சூரர்களை வாட்டி, - அந்தகன் வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே
யமபுரிக்கு அவர்களை அனுப்பிய கோபத்தை உடைய குதிரையாகிய மயில் வாகனனே, - வேதா நால் தலை சீக் கொளும்படி
பிரமனுடைய நான்கு தலைகளையும் சீழ் கொள்ளும்படி குட்டி, - கோலாகாலம் அது ஆட்டு மந்திர வேலா
குதூகலத்துடன் (பிரமனின் சிறைவாசத்தை) கொண்டாடிய மந்திர வேலனே, - மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே.
திருமாலின் மகளாகிய வள்ளிக்கு கருணை காட்டிய பெருமாளே.