திருப்புகழ் 782 மாலினால் எடுத்த (வைத்தீசுரன் கோயில்)

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த ...... தனதான
மாலி  னாலெ  டுத்த  கந்தல்  சோறி  னால்வ  ளர்த்த  பொந்தி 
மாறி  யாடெ  டுத்தசி  ந்தை  ......  யநியாய 
மாயை  யாலெ  டுத்து  மங்கி  னேனை  யாஎ  னக்கி  ரங்கி 
வாரை  யாயி  னிப்பி  றந்து  ......  இறவாமல் 
வேலி  னால்வி  னைக்க  ணங்கள்  தூள  தாஎ  ரித்து  உன்றன் 
வீடு  தாப  ரித்த  அன்பர்  ......  கணமூடே 
மேவி  யானு  னைப்பொல்  சிந்தை  யாக  வேக  ளித்து  கந்த 
வேளெ  யாமெ  னப்ப  ரிந்து  ......  அருள்வாயே 
காலி  னாலெ  னப்ப  ரந்த  சூரர்  மாள  வெற்றி  கொண்ட 
கால  பாநு  சத்தி  யங்கை  ......  முருகோனே 
காம  பாண  மட்ட  நந்த  கோடி  மாத  ரைப்பு  ணர்ந்த 
காளை  யேறு  கர்த்த  னெந்தை  ......  யருள்பாலா 
சேலை  நேர்வி  ழிக்கு  றம்பெ  ணாசை  தோளு  றப்பு  ணர்ந்து 
சீரை  யோது  பத்த  ரன்பி  ......  லுறைவோனே 
தேவர்  மாதர்  சித்தர்  தொண்டர்  ஏக  வேளு  ருக்கு  கந்த 
சேவல்  கேது  சுற்று  கந்த  ......  பெருமாளே. 
  • மாலினாலெடுத்த கந்தல்
    ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு,
  • சோறினால் வளர்த்த பொந்தி
    சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சரீரம்,
  • மாறி யாடெடுத்தசிந்தை
    மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம்,
  • அநியாய மாயையாலெடுத்து மங்கினேன்
    இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன்.
  • ஐயாஎ னக்கிரங்கி வாரையா
    ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா,
  • இனிப்பி றந்து இறவாமல்
    இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்,
  • வேலினால் வினைக்கணங்கள் தூளதா எரித்து
    உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து,
  • உன்றன் வீடு தா
    உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.
  • பரித்த அன்பர் கணமூடே
    அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில்
  • மேவி யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து
    யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும்
  • கந்த வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே
    கந்த வேளே நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக.
  • காலினாலெனப்ப ரந்த சூரர் மாள
    காற்றிலே பரந்ததுபோலப் பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி
  • வெற்றி கொண்ட கால பாநு
    ஜயம் கொண்ட, யமன் போன்ற வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த
  • சத்தி யங்கை முருகோனே
    சக்திவேலை அழகிய கையிலே கொண்ட முருகனே,
  • காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த
    மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த*
  • காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா
    திருமாலாகிய ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே,
  • சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து
    சேல் மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,
  • சீரை யோது பத்தரன்பிலுறைவோனே
    உன் புகழை ஓதும் பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,
  • தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக
    தேவர்களும், பெண்டிரும், சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்
  • வேளுருக்கு உகந்த
    புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன் கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,
  • சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே.
    சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com