தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
- பரிமள களப சுகந்த
நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் - சந்தத் தனமானார்
அழகிய மார்பினை உடைய பெண்களின், - படை யமபடையென
படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக - அந்திக்கும் கண் கடையாலே
கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், - வரியளி நிரைமுரல்
கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற - கொங்குக் கங்குற் குழலாலே
பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், - மறுகிடு மருளனை
மயங்கித் திரிகின்ற அடியேனை, - இன்புற்று அன்புற்று அருள்வாயே
இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. - அரிதிரு மருக
திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, - க டம்பத் தொங்கற் றிருமார்பா
கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, - அலைகுமு குமுவென வெம்ப
அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு - கண்டித்து எறிவேலா
கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே*, - திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா
முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, - ஜெயஜெய ஹரஹர
வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, - செந்திற் கந்தப் பெருமாளே.
திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.