தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான
பதும இருசரண் கும்பிட் டின்பக்
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும்
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்
பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப்
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
தினிது வரையவெண் சந்தத் திந்துப்
புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ
திதிதி ததததந் திந்திந் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தரரவென் றென்றொப் பின்றித்
திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச்
சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென்
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே.
- பதும இரு சரண் கும்பிட்டு இன்பக் கலவி நலம் மிகும் துங்கக்
கொங்கை பகடு புளகிதம் துன்ற
தாமரை மலர் போன்ற இரண்டு பாதங்களையும் வணங்கி, இன்பம் தரும் கலவிச் சுகம் மிக்குள்ள உயர்ந்த மார்பகப் பரப்பு புளகிதம் கொள்ள, - கன்றிக் கயல் போலும் பரிய கரிய கண் செம் பொன் கம்பிக்
குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சிப் பதற
சினக் குறிப்புள்ள கயல் மீன் போன்ற பெரிய கரு நிறம் கொண்ட கண்கள் (காதிலுள்ள) செம்பொன் கம்பியில் பொருத்தப்பட்ட குண்டலங்களைத் தாக்க, மருட்சியுடன் இனிய மொழிகள் கொஞ்சி பதட்டத்துடன் வெளிவர, - விதம் உறும் கந்துக் கொந்துக் குழல் சாயப் புதுமை நுதி
பங்கத்து அங்கத்து இனிது வரைய
விதம் விதமாக பிணைக்கப்பட்ட பூங்கொத்துக் கொண்ட கூந்தல் சரிய, புதிய வகையில் நுனி நகத்தால் மிகவும் அழுத்தமாக (வந்தவரின்) உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்ய, - வெண் சந்தத்து இந்துப் புருவ வெயர்வுடன் பொங்க
மதிக்கத் தக்க அழகிய பிறை போன்ற புருவத்தில் வியர்வை மேலெழும்படி, - கங்கைச் சடைதாரி பொடி செய்து அருள் மதன் தந்த்ரப்
பந்திக்கு அறிவை இழவிடும் பண்புத் துன்பப் பொருளின்
மகளிர் தம் அன்புப் பண்பைத் தவிரேனோ
கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் பொடியாக்கி அருளிய மன்மதனுடைய படையாகிய வஞ்சக (விலை மகளிர்) கூட்டத்துக்கு எனது அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும், துன்பம் தரும் வேசியர் மேல் அன்பு கொள்ளும் பண்பையும் தவிர்க்க மாட்டேனோ? - திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட்
டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று என்று
ஒப்பு இன்றித் திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்டச்
சுவர் சோர
திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று இவ்வாறான ஒலிகளை பலமுறை ஒப்பில்லாத வகையில் எழுப்பி, திமிலை என்னும் பறையை ஒலித்து எட்டுத் திசைகளும் அண்டத்தின் சுவர்களும் சோர்ந்து போகும்படி, - சதியில் வரு பெரும் சங்கத் தொங்கல் புய அசுரர் வெகுண்டு
அஞ்சிக் குஞ்சித் தலை கொடு அடி பணிந்து
வஞ்சனை எண்ணத்துடன் வந்த பெரிய கூட்டமான, மாலை அணிந்த புயங்களை உடைய, அசுரர்கள் (முதலில்) கோபித்துப் (பின்பு) பயந்தும், மயிர்த் தலையுடன் உனது திருவடியில் பணிந்து, - எங்கட்கு உன் கண் க்ருபை தா என் சமர குமர கஞ்சம் சுற்றும்
செய்ப்பதியில் முருக
எங்களுக்கு உன் கடைக் கண் திருவருளைத் தருவாயாக என்று கேட்கும்படிக்கு போர் செய்தவனே, குமரனே, தாமரைத் தடாகங்கள் பல சூழ்ந்துள்ள வயலூர் முருகனே, - முன் பொங்கித் தங்கிச் சலதி அலை பொரும் செந்தில் கந்தப்
பெருமாளே.
எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.