திருப்புகழ் 79 பருத்தந்த (திருச்செந்தூர்)

தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத்தந்தத்  தினைத்தந்திட் 
டிருக்குங்கச்  சடர்த்துந்திப் 
பருக்கும்பொற்  ப்ரபைக்குன்றத்  ......  தனமானார் 
பரிக்குந்துற்  சரக்கொன்றத் 
திளைத்தங்குற்  பலப்பண்பைப் 
பரக்குஞ்சக்  கரத்தின்சத்  ......  தியைநேரும் 
துரைச்செங்கட்  கடைக்கொன்றிப் 
பெருத்தன்புற்  றிளைத்தங்குத் 
துணிக்கும்புத்  தியைச்சங்கித்  ......  தறியேனைத் 
துணைச்செம்பொற்  பதத்தின்புற் 
றெனக்கென்றப்  பொருட்டங்கத் 
தொடுக்குஞ்சொற்  றமிழ்த்தந்திப்  ......  படியாள்வாய் 
தருத்தங்கப்  பொலத்தண்டத் 
தினைக்கொண்டச்  சுரர்க்கஞ்சத் 
தடத்துன்பத்  தினைத்தந்திட்  ......  டெதிர்சூரன் 
சமர்க்கெஞ்சிப்  படித்துஞ்சக் 
கதிர்த்துங்கத்  தயிற்கொண்டத் 
தலத்தும்பர்ப்  பதிக்கன்புற்  ......  றருள்வோனே 
திருக்கஞ்சத்  தனைக்கண்டித் 
துறக்கங்குட்  டிவிட்டுஞ்சற் 
சிவக்கன்றப்  பொருட்கொஞ்சிப்  ......  பகர்வோனே 
செயத்துங்கக்  கொடைத்துங்கத் 
திருத்தங்கித்  தரிக்கும்பொற் 
றிருச்செந்திற்  பதிக்கந்தப்  ......  பெருமாளே. 
  • பருத் தந்தத்தினைத் தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்திப் பருக்கும் பொன் ப்ரபை குன்றத் தனம் மானார்
    பருத்த யானையின் தந்தத்தைப் போல் இருந்து, கச்சை மீறித் தள்ளி, பருத்து எழும், பொன் ஒளி கொண்ட மலை போன்ற மார்பகங்களை உடைய மாதர்களின்,
  • பரிக்கும் துற் சரக்கு ஒன்றத் திளைத்து அங்கு உற்பலப் பண்பை பரக்கும்
    கொடுமையைத் தாங்கும் சரத்துக்கு (அம்புக்கு) ஒத்ததாக விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் தோற்க வைத்து,
  • சக்கரத்தின் சத்தியை நேரும் துரைச் செங்கண் கடைக்கு ஒன்றி
    (திருமாலின்) சக்கரப் படை போலவும், (முருகனின்) சக்தி வேல் போலவும் வேகம் கொண்ட செவ்விய கடைக் கண்ணின் வலையில் வீழ்ந்து,
  • பெருத்த அன்பு உற்று இளைத்து அங்குத் துணிக்கும் புத்தியைச் சங்கித்து அறியேனை
    பேரன்பு கொண்டு இளைத்து அங்கு அழிபடும் புத்தியைச் சந்தேகித்து அறியாத என்னை
  • துணைச் செம் பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அப் பொருள் தங்கத் தொடுக்கும் சொல் தமிழ்த் தந்து இப்படி ஆள்வாய்
    உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து, எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்.
  • தருத் தங்கு அப் பொலத்து அண்டத்தினைக் கொண்டு அச் சுரர்க்கு அஞ்சத் தடத் துன்பத்தினைத் தந்திட்டு எதிர் சூரன்
    கற்பக மரங்கள் உள்ள அந்தப் பொன்னுலகத்தைக் கவர்ந்து, அந்தத் தேவர்கள் அஞ்சும்படி பெருந் துன்பங்களை அவர்களுக்குத் தந்து, போரில் உன்னை எதிர்த்து வந்த சூரன்
  • சமர்க்கு எஞ்சிப் படித் துஞ்சக் கதிர்த் துங்கத்து அயில் கொண்டு அத் தலத்து உம்பர்ப் பதிக்கு அன்புற்று அருள்வோனே
    போரில் தாழ்ந்து குறைவுபட்டு அழிய, ஒளியும் தூய்மையும் கொண்ட வேல் கொண்டு மடியச்செய்து, அந்த விண்ணுலக தேவர் தலைவனாகிய இந்திரனிடம் அன்புற்று அருள் புரிந்தவனே,
  • திருக் கஞ்சத்தனைக் கண்டித்து உறக் கம் குட்டி விட்டும் சத் சிவற்கு அன்று அப் பொருள் கொஞ்சிப் பகர்வோனே
    அழகிய தாமரையில் இருக்கும் பிரமனை கண்டித்து, (ப்ரணவத்துக்கு பொருள் தெரியாததால்) அழுந்தும்படி குட்டி விட்டு, நல்ல சிவபிரானுக்கு அன்று அந்த மூலப் பொருளை அன்புடன் உபதேசித்தவனே,
  • செயத் துங்கக் கொடைத் துங்கத் திருத் தங்கித் தரிக்கும் பொன் திருச்செந்திற் பதிக் கந்தப் பெருமாளே.
    வெற்றித் தூய்மை, கொடைத் தூய்மை, செல்வம் ஆகியவை நிலை பெற்று விளங்கும் அழகிய திருச்செந்தூர்ப் பதியில் உள்ள கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com