தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
- மதனச் சொல் காரக் காரிகள் பவள கொப்பு ஆடச் சீறிகள்
மன்மதன் சம்பந்தமான காமச் சொற்களை உற்சாகத்துடன் பேசுபவர்கள். (காதில் உள்ள) பவளத் தோடு ஆடும்படி சீறிக் கோபிப்பவர்கள். - மருளப் பட்டு ஆடைக் காரிகள் அழகாக மவுனச் சுட்டு ஆடிச்
சோலிகள்
கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை அணிபவர்கள். அழகாக, மவுனத்தாலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். - இசலிப்பித்து ஆசைக் காரிகள் வகை முத்துச் சாரச் சூடிகள்
விலை மாதர் குதலைச் சொல் சாரப் பேசிகள் நரக அச்சில்
சாடிப் பீடிகள்
பிணங்குதல் மூலமாக தங்கள் ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைப் பேச்சுக்களை சரசமாகப் பேசுபவர்கள். நரகமாகிய அச்சில் ஆடவரைச் சாய்வித்துத் துன்பப்படுத்துவர். - குசலைக் கொள் சூலைக் காலிகள் மயல் மேலாய்க் கொளுவிக்
கட்டு ஆசைப் பாசனை பவம் துக்கக் கார சூதனை குமுதப்
பொன் பாதச் சேவையில் அருள்வாயே
தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தைக் கலைப்பவர்கள். இத்தகைய வேசியர்பால் மோகம் மேற்பட்டு, (அதனால்) கொள்ளப்பட்டுக் கட்டுண்டு, அந்த ஆசையில் பற்று கொண்ட என்னை, பிறப்பால் வரும் துக்க நிகழ்ச்சிகளில் வீழ்ந்த வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர் அணிந்த அழகிய திருவடிச் சேவையைத் தந்து அருள்வாயாக. - கதறக் கல் சூரைக் கார் கடல் எரியத் திக்கு ஊறில் பாழ்பட
ககன(ம்) கட்டாரிக்கா(க) இரை இடும் வேலா
ஏழு கிரியும் அவை காவலாக இருந்த சூரனும் கதறி அழவும், கரிய கடல் எரியவும், (எட்டு) திசைகளும் இடையூறு பட்டுப் பாழாகவும், (அசுர) சேனைகளை வாளுக்கு உணவாகும்படிச் செய்த வேலனே, - கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் கிரி உறை பச்சைப் பாசக்
கோகில கவுரி பொன் சேர்வைச் சேகர முருகோனே
சூரியன் வலம் வரும் பொன் மலையாகிய மேருவின் பக்கத்தில் உள்ள கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதியின் மார்பகத்திலுள்ள அழகிய சந்தனக் கலவை உன் சிரத்தின் மேற்படும்படிக் கட்டிக் கொள்ளும் குழந்தை முருகோனே, - திதலைப் பொன் பாணிக் கார் குயில் அழகில் பொன்
தோகைப் பாவையை தினம் உற்றுச் சாரத் தோள் மிசை
அணைவோனே
தேமல் உடையவளும், அழகிய அன்பை இதயத்தில் உடையவளும், கரிய குயில் போன்று அழகுடையவளும், பொலிவு நிறைந்த மயில் போன்ற, பதுமை போன்றவளுமாய் விளங்கும் வள்ளியை நாள்தோறும் அவளைத் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவனே, - திலதப் பொட்டு ஆசைச் சேர் முக மயில் உற்றிட்டு ஏறிக்
காழியில் சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய பெருமாளே.
சிறந்த திலகப் பொட்டு விருப்பமுடன் நெற்றியில் அணியும் திரு முகத்தை உடையவனே, மயிலின் மேல் பொருந்தி ஏறி சீகாழியில்* அமர்ந்து, அத்தலத்தில் சிவபெருமான் புகழும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் ('தோடுடைய செவியன்'** என்ற) தேவாரப் பாவை ஓதிய (திருஞானசம்பந்தப்) பெருமாளே.