தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்
காமாவறு சோமச மானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
- பூமாது உரமேயணி மால்
தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மி தேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும், - மறை வாய்நாலுடையோன்
வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும், - மலி வானவர் கோமான்
கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், - முநிவோர்முதல் யாரும்
முநிவர்கள் முதலிய யாவரும், - இயம்புவேதம் பூராயமதாய்மொழி நூல்களும்
இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் - ஆராய்வதிலாத அடலாசுரர்
ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் - போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி, - நீ மாறு அருளாயென
நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று - ஈசனை பாமாலைக ளால்தொழுதே
ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித்தொழுது, - திருநீறார்தரு மேனிய
திருநீறால் அழகு விளங்கும் திருமேனியனே, - தேனியல் கொன்றையோடு
தேன் பொதிந்த கொன்றை மலருடனே - நீரேர்தரு சானவி* மாமதி
நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும், - காகோதர மாதுளை கூவிளை
பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும், - நேரோடம் விளாமுதலார்சடை யெம்பிரானே
நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே, - போமாறினி வேறெது வோதெனவே
நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே, - ஆரருளாலவர் ஈதரு போர்வேலவ
நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே, - நீல கலாவி யிவர்ந்து
நீலத் தோகை மயில் மீது ஏறி - நீடு பூலோகமொடே யறு லோகமு
நீண்ட இந்தப் பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும் - நேரோர் நொடி யேவரு வோய
நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே, - சுர சேனாபதி யாயவனே
தேவர்களின் சேனாதிபதி ஆனவனே, - உனை யன்பினோடுங் காமா அறு சோம சம ஆனன
உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே, - தாமாமண மார்தரு நீப
மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே, - சுதாமாவெனவேதுதி யாது
நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல் - உழல் வஞ்சனேனைக் காவாய்
திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக. - அடிநாள் அசு ரேசரையேசாடிய
அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த - கூர்வடி வேலவ
கூரிய வேலாயுதத்தை உடையவனே, - காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே.
மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே.