தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
- தினமணி சார்ங்க பாணி யென
சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன், - மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில்
மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில் - ஆரஞ் செழுமணி சேர்ந்த பீடிகையில்
முத்தாலும் அழகிய ரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் - இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட
(அமர்ந்து) கீதம் நிரம்பிய பாடல்களைப் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும், - இருபாலும் இனவளை பூண்கையார்க வரியிட
இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய மாதர்கள் நின்று கவரி வீசவும், - வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி
மாலைகளைச் சூடி, புனுகு, அகில், சந்தனம் இவற்றைப் பூசிக்கொண்டு, - அரசாகி
அரச பதவியில் இருந்து, - இனிதிறுமாந்து வாழும்
இன்பமயமாக இறுமாப்புடனே வாழ்கின்ற, - இருவினை நீண்ட காயம்
நல்வினை, தீவினை இரண்டிற்கும் கட்டுப்பட்ட இந்த சரீரம் - ஒருபிடி சாம்ப லாகி விடலாமோ
கடைசியில் ஒருபிடி சாம்பலாக மாறி அழிந்து போகலாமா? - வனசரர் ஏங்க வான முகடுற வோங்கி
காட்டில் திரியும் வேடர்கள் அதிசயிக்க வானத்தின் உச்சியைத் தொடும்படியாக வளர்ந்து, - ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளியும் தோழிமார்களும் அருகே இருக்க - மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மயில்களும் மான்களும் சூழ, செழித்து வளர்ந்த வேங்கைமரமாகி - மலைமிசை தோன்று மாய வடிவோனே
வள்ளிமலை மேலே தோன்றிய மாய வடிவத்தோனே, - கனசமண் மூங்கர் கோடி
பெருத்த சமண ஊமையர்கள் பலரும் - கழுமிசை தூங்க
(வாதிலே உன்னிடம் தோற்று) கழுமுனையில் தொங்க, - நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற
திருநீறு உன் கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டில் பரவ, - வேதக் கவிதரு காந்த
வேதப்பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைத் தந்தருளிய ஒளிகொள் மேனியனே, - பால கழுமல பூந்த ராய
பாலகன் ஞானசம்பந்தனாக வந்த முருகா, கழுமலம், பூந்தராய் என்ற பெயர்கொண்ட சீகாழிப்பதியில்* வீற்றிருப்போனே, - கவுணியர் வேந்த தேவர்பெருமாளே.
கவுணியர் குலத்தில் வந்த அரசனே, தேவர் பெருமாளே.