திருப்புகழ் 773 செக்கர்வானப் பிறை (சீகாழி)

தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா  னப்பிறைக்  கிக்குமா  ரற்கலத் 
தெற்கிலூ  தைக்கனற்  ......  றணியாத 
சித்ரவீ  ணைக்கலர்ப்  பெற்றதா  யர்க்கவச் 
சித்தம்வா  டிக்கனக்  ......  கவிபாடிக் 
கைக்கபோ  லக்கிரிப்  பொற்கொள்ரா  சிக்கொடைக் 
கற்பதா  ருச்செகத்  ......  த்ரயபாநு 
கற்றபேர்  வைப்பெனச்  செத்தையோ  கத்தினர்க் 
கைக்குணான்  வெட்கிநிற்  ......  பதுபாராய் 
சக்ரபா  ணிக்குமப்  பத்மயோ  னிக்குநித் 
தப்ரதா  பர்க்குமெட்  ......  டரிதாய 
தத்வவே  தத்தினுற்  பத்திபோ  தித்தஅத் 
தத்வரூ  பக்கிரிப்  ......  புரைசாடிக் 
கொக்கிலே  புக்கொளித்  திட்டசூர்  பொட்டெழக் 
குத்துரா  வுத்தபொற்  ......  குமரோனே 
கொற்றவா  வுற்பலச்  செச்சைமா  லைப்புயக் 
கொச்சைவாழ்  முத்தமிழ்ப்  ......  பெருமாளே. 
  • செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல
    செவ்வானத்து பிறை நிலவுக்கும், கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனுக்கும், இவை மட்டும் இல்லாமல்
  • தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத சித்ர வீணைக்கு
    தெற்கிலிருந்து வரும் ஊதைக் காற்றுக்கும், நெருப்புப் போலச் சுடுகின்ற தன்மை குறையாத (இன்பகரமான ஓசையைத் தரும்) சித்திர வீணைக்கும்,
  • அலர் பெற்ற தாயர்க்கு அவச் சித்தம் வாடி
    வசை மொழிகளைக் கொண்ட தாய்மார்களுக்கும், வீணாக உள்ளம் வாட்டம் அடைந்து,
  • கனக் கவி பாடி
    (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெரிதாகப் பாடல்களைப் பாடி,
  • கைக் கபோலக் கிரி பொன் கொள் ராசிக் கொடைக் கற்ப தாருச் செக த்ரய பானு
    (அப்பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் சேரும் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், கொடையில் கேட்டதைத் தரும் கற்பக மரத்தைப் போன்றவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் சூரியன் என்றும்,
  • கற்ற பேர் வைப்பு எனச் செத்தை யோகத்தினர்க் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்
    கற்ற புலவர்களின் சேமநிதி (நீங்கள்) என்றும், (பொய்யான புகழ் கூறிக்) குப்பையாகிய செல்வ யோகம் படைத்த மனிதர்களின் கைக்குள் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக.
  • சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கு(ம்) நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய
    சக்கரத்தைக் கையில் கொண்ட திருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், என்றும் அழியாதவர் என்று புகழ் பெற்ற பரம சிவனுக்கும் எட்டுதற்கு அரியதான
  • தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத் தத்வ ரூப
    தத்துவ வேதத்தின் தோற்றத்தை உபதேசம் செய்த அந்த ஞான வடிவானவனே,
  • கிரிப் புரை சாடிக் கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ
    கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்து, மாமரத்தில் புகுந்து ஒளித்திருந்த சூரனின் உடல் தொளை படும்படியாக
  • குத்து ராவுத்த பொற் குமரோனே
    (வேலினால்) குத்திய குதிரை (மயில்) வீரனே, அழகிய குமரனே,
  • கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக் கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே.
    அரசனே, நீலோற்பலம், வெட்சி மாலை இவைகளை அணிந்த புயங்களை உடையவனே, கொச்சை என்னும் சீகாழியில்* வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com