தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
- சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே
கடலில் இருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே, - தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே
தென்றல் காற்று சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே, - அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே
மாலைப் பொழுதாகிய இரவின் நெருக்கத்தாலே, - அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள்
அன்பு மிகுந்து எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள். - நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர்
வேலினை உந்திப் பொரு வேளே
சங்குகள் உள்ள சமுத்திரத்தை, கலங்கிய தோற்றம்ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும் வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே, - சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே
சந்தக் கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே, - சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே.
சண்பை என்னும் சீகாழியில்* பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.