திருப்புகழ் 777 விடம் என மிகுத்த (சீகாழி)

தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி  குத்தவட  வனலெனவு  யர்த்துரவி 
விரிகதிரெ  னப்பரவு  ......  நிலவாலே 
விதனமிக  வுற்றுவரு  ரதிபதிக  டுத்துவிடு 
விரைதருவி  தட்கமல  ......  கணையாலே 
அடலமரி  யற்றுதிசை  யினில்மருவி  மிக்கவனல் 
அழலொடுகொ  தித்துவரு  ......  கடைநாளில் 
அணுகிநம  னெற்றமயல்  கொளுமநிலை  சித்தமுற 
அவசமொட  ணைத்தருள  ......  வரவேணும் 
அடவிதனில்  மிக்கபரு  வரையவர  ளித்ததிரு 
அனையமயில்  முத்தமணி  ......  சுரயானை 
அழகியம  ணிக்கலச  முலைகளில்ம  யக்கமுறு 
மதிவிரக  சித்ரமணி  ......  மயில்வீரா 
கடதடக  ளிற்றுமுக  ரிளையவகி  ரிக்குமரி 
கருணையொட  ளித்ததிற  ......  முருகோனே 
கமலமல  ரொத்தவிழி  யரிமருக  பத்தர்பணி 
கழுமலந  கர்க்குமர  ......  பெருமாளே. 
  • விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் எனப் பரவு நிலவாலே விதனம் மிக உற்று
    விஷம் போலப் பொருந்திய, வடமுகாக்கினி என்று கூறும்படியாக, உச்சிப்பகலின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்தும்,
  • வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே அடல் அமர் இயற்று திசையினில்
    (அச்சமயத்தில்) வருகின்ற ரதியின் கணவனான மன்மதன் கோபித்துச் செலுத்துகின்ற, வாசனை தருகின்ற இதழ்களை உடைய தாமரை அம்பினால் வலியப் போரைச் செய்யும் சமயத்தில்,
  • மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ(ந்)நிலை
    என்னைச் சார்ந்து, மிக்க நெருப்புத் தணல் போல கொதிப்புடன் படுகின்ற கடைசி நாளில் (என்னை) நமன் அணுகித் தாக்க, நான் மயக்கம் கொள்ளும் அச்சமயத்தில்,
  • சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வர வேணும்
    நீ மனம் வைத்து பரவசத்துடன் என்னை அணைத்து அருள வர வேண்டும்.
  • அடவி தனில் மிக்க பரு வரையவர் அளித்த திரு அனைய மயில் முத்த மணி சுர யானை
    காட்டில் நிறைந்திருந்த பெருத்த மலைவாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த, லக்ஷ்மி போன்ற மயிலாகிய வள்ளி, முத்து மாலை அணிந்த தேவயானை (ஆகிய இருவர்களின்)
  • அழகிய மணிக் கலச முலைகளில் மயக்கம் உறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா
    அழகிய மணி மாலைகள் உள்ள குடம் போன்ற மார்பகங்களின் மேல் மோகம் கொள்ளும் மிகுந்த காதலனே, அழகிய மணிகள் புனைந்த மயில் வீரனே,
  • கட தட களிற்று முகர் இளையவ கிரிக் குமரி கருணையோடு அளித்த திற முருகோனே
    மதமும் பெருமையும் பொருந்திய யானை முகவராகிய கணபதிக்குத் தம்பியே, இமய மலை அரசன் மகளான பார்வதி (தேவர்களின் மீது) கருணை கொண்டு அருளிய வலிமை மிக்க முருகனே,
  • கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர்க் குமர பெருமாளே.
    தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலின் மருகனே, அடியார்கள் பணிகின்ற கழுமலம்* என்னும் சீகாழியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com