தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது ...... மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி ...... வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர ...... வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற ...... இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் ...... பெருமாளே.
- அஞ்சுவித பூதமும்
பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், - கரண நாலும்
மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், - அந்திபகல் யாதும் அறியாத
இரவு - பகல் என்ற இரண்டும் அறியாத - அந்தநடு ஆதி யொன்றுமிலதான
முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான - அந்தவொரு வீடு பெறுமாறு
அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப் பெறுமாறு, - மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மேகம் தவழ்கின்ற சிகரங்களை உடைய அழகிய மலைவாழ் வேடர்களின் - மங்கைதனை நாடி வனமீது
மகளாகிய வள்ளியை விரும்பி வள்ளிமலைக் காட்டில் - வந்த சரணார விந்தம் அது பாட
வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு - வண்டமிழ் விநோதம் அருள்வாயே
வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக. - குஞ்சர கலாப வஞ்சி
ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின் சாயலுடைய, மங்கை தேவயானையின் - அபிராம குங்கும படீர அதிரேக
அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள - கும்பதன மீது சென்றணையு மார்ப
மார்பின் மீது மனதாரத் தழுவி அணைக்கும் திருமார்பா, - குன்று தடுமாற இகல்கோப
கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே, - வெஞ்சமர சூரன் நெஞ்சு பக
கொடிய போரினைச் செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபட - வீரவென்றிவடி வேலை விடுவோனே
வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே, - விம்பமதில் சூழு நிம்பபுர வாண
ஒளி பொருந்திய மயில்கள் சூழ்ந்துள்ள நிம்பபுரம்* என்ற தலத்தவனே, - விண்டல மகீபர் பெருமாளே.
விண்ணுலகத்துத் தேவேந்திரர்களின் பெருமாளே.