திருப்புகழ் 753 குரைகடல் உலகினில் (வேப்பூர்)

தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த ...... தனதான
குரைகட  லுலகினி  லுயிர்கொடு  போந்து 
கூத்தாடு  கின்ற  ......  குடில்பேணிக் 
குகையிட  மருவிய  கருவிழி  மாந்தர் 
கோட்டாலை  யின்றி  ......  யவிரோதம் 
வரஇரு  வினையற  உணர்வொடு  தூங்கு 
வார்க்கே  விளங்கு  ......  மநுபூதி 
வடிவினை  யுனதழ  கியதிரு  வார்ந்த 
வாக்கால்மொ  ழிந்த  ......  ருளவேணும் 
திரள்வரை  பகமிகு  குருகுல  வேந்து 
தேர்ப்பாகன்  மைந்தன்  ......  மறையோடு 
தெருமர  நிசிசரர்  மனைவியர்  சேர்ந்து 
தீப்பாய  இந்த்ர  ......  புரிவாழ 
விரிதிரை  யெரியெழ  முதலுற  வாங்கு 
வேற்கார  கந்த  ......  புவியேழும் 
மிடிகெட  விளைவன  வளவயல்  சூழ்ந்த 
வேப்பூர  மர்ந்த  ......  பெருமாளே. 
  • குரைகடலுலகினில் உயிர்கொடு போந்து
    ஆரவாரம் செய்கின்ற கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து,
  • கூத்தாடுகின்ற குடில்பேணி
    பலவித விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி,
  • குகையிட மருவிய கருவிழி மாந்தர்
    மலைக்குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும்
  • கோட்டாலை யின்றி
    துன்பங்கள் எவையும் இல்லாமல்,
  • அவிரோதம் வர
    விரோதமின்மை என்னும் மனப்பான்மை வருவதற்கும்,
  • இரு வினையற
    நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்குவதற்கும்,
  • உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும்
    ஞான உணர்வோடு இருப்பவர்களுக்கே விளங்கும்படியான
  • அநுபூதி வடிவினை
    அனுபவ ஞானமான உன் அருட்பிரசாத வடிவத்தினை
  • உனது அழகிய திருவார்ந்த வாக்கால்
    உன் அழகிய லக்ஷ்மிகரம் நிறைந்த திருவாக்கால்
  • மொழிந்தருளவேணும்
    உபதேசித்து அருளவேண்டும்.
  • திரள்வரை பகமிகு
    திரண்டு பருத்த கிரெளஞ்சமலையானது பிளவுபடவும்,
  • குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன்
    குருகுலவேந்தன் அர்ச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த கண்ணன் (திருமாலின்) மைந்தனாகிய பிரமன்
  • மறையோடு தெருமர
    தான் கற்ற வேதமும் தானுமாகக் கலக்கம் அடையவும்,
  • நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய
    அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும்,
  • இந்த்ரபுரிவாழ
    தேவேந்திரனின் தலைநகரம் அமராவதி வாழ்வுபெறவும்,
  • விரிதிரை யெரியெழ
    பரந்து விரிந்த அலைகடலில் நெருப்புப் பற்றி எழவும்,
  • முதலுற வாங்கு வேற்கார கந்த
    முதன்மையாம் தன்மை படைத்த வேலாயுதத்தைச் செலுத்திய கந்தனே,
  • புவியேழும் மிடிகெட விளைவன
    ஏழுலகின் வறுமையும் நீங்குமாறு செழிப்பான விளைச்சலைத் தரும்
  • வளவயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே.
    வளமான வயல்கள் சூழ்ந்த வேப்பூரில்* அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com