திருப்புகழ் 750 குடத் தாமரையாம் (விருத்தாசலம்)

தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன ...... தனதான
குடத்தாமரை  யாமென  வேயிரு 
தனத்தார்மதி  வாணுத  லாரிருள் 
குழற்காடின  மாமுகில்  போல்முது  ......  கலைமோதக் 
குலக்கார்மயி  லாமென  வேகயல் 
விழித்தார்கர  மேல்கொடு  மாமுலை 
குடத்தியாழ்கிளி  யாமென  வேகுயில்  ......  குரலோசை 
படித்தார்மயி  லாமென  வேநடை 
நெளித்தார்பல  காமுகர்  வார்கலை 
பழிப்பாரவ  ராசையை  மேல்கொடு  ......  விலைமாதர் 
படிக்கார்மின  லாமென  வேநகை 
புரித்தார்பலர்  வாயிதழ்  சேர்பொருள் 
பறிப்பார்பழி  காரிகள்  நாரிக  ......  ளுறவாமோ 
அடைத்தார்கட  லோர்வலி  ராவண 
குலத்தோடரி  யோர்சர  னார்சின 
மழித்தார்முகி  லேய்நிற  ராகவர்  ......  மருகோனே 
அறுத்தாரய  னார்தலை  யேபுர 
மெரித்தாரதி  லேபுல  னாருயி 
ரளித்தாருடல்  பாதியி  லேயுமை  ......  அருள்பாலா 
விடத்தாரசு  ரார்பதி  வேரற 
அடித்தாய்கதிர்  வேல்கொடு  சேவகம் 
விளைத்தாய்குடி  வாழம  ரோர்சிறை  ......  மிடிதீர 
விழித்தாமரை  போலழ  காகுற 
மகட்கானவ  ணாஎன  தாயுறை 
விருத்தாசலம்  வாழ்மயில்  வாகன  ......  பெருமாளே. 
  • குடத் தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார்
    குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் (உவமிக்கத் தக்க) இரு மார்பகங்களை உடையவர்கள், பிறைச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள்,
  • இருள் குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத
    இருண்ட மேகம் போல் கருத்த கூந்தல் காடு போல் அடர்ந்து, முதுகில் அலை மோதுவது போலப் புரள,
  • குலக் கார் மயிலாம் எனவே கயல் விழித் தார் கரம் மேல் கொடு மா முலை குடத்து
    சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலைப் போலக் களிப்பும், கயல் மீன் போன்ற கண்களும் கொண்டவர்களாய், மாலை அணிந்த கையின் மேல் ஏந்தியுள்ள, அழகிய மார்பு போன்ற, குடத்தை ஒரு பக்கமாகக் கொண்டவர்களாய்,
  • யாழ் கிளியாம் எனவே குயில் குரலோசை படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார்
    யாழ் என்றும், கிளி என்றும் சொல்லும்படியான குயிலின் ஓசை போன்ற குரலை மிழற்றுபவர்களாய், மயில் என்று சொல்லும்படி நெளிந்த நடையினராய்,
  • பல காமுகர் வார் கலை பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர்
    பல காம தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களாய், ஆசையை ஆபரணமாக மேற் பூண்டு வேசியர்களாய்,
  • படிக் கார் மி(ன்)னலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ
    படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளி கொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய், பல பேர்வழிகளின் வாயிதழ் ஊறலை அனுபவிப்பவர்களாய், பொருளை அபகரிப்பவர்களாகிய பழிகாரிகளாகிய விலைமாதர்களின் உறவு எனக்குத் தகுமோ?
  • அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே
    கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே,
  • அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் அளித்தார் உடல் பாதியிலே உமை அருள்பாலா
    பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே,
  • விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் விளைத்தாய்
    விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய்,
  • குடி வாழ அமரோர் சிறை மிடி தீர விழித் தாமரை போல் அழகா குற மகட்கு ஆன வ(ண்)ணா
    தேவர்கள் சிறையும் வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே,
  • என(து) தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில் வாகன பெருமாளே.
    என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com