தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
- திருமொழி யுரைபெற
வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக - அரன் உனதுழி பணிசெய
சிவபிரான் உன்னிடத்தில் வணங்க - முனம் அருளிய குளவோனே
முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, - திறலுயர் மதுரையில் அமணரை
ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் - உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே
உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே*, - ஒருவு அரும் உனதருள்
நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் - பரிவிலர் அவர்களின்உறு
அன்பில்லாதவர்களைப் போல - படர் உறுமெனை யருள்வாயோ
துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? - உலகினில் அனைவர்கள் புகழ்வுற
உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக - அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா
திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே**, - கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் - கணினெதிர் தருவென முனமானாய்
கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, - கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, - கருணையில் மொழிதரு முதல்வோனே
கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, - முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு - முரணுறு மசுரனை முனிவோனே
மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, - முடிபவர் வடிவறு சுசிகர முறை
இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய - தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே.
தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே.