தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.
- அறிவி லாதவர் ஈனர்
அறிவு இல்லாதவர்கள், இழிவானவர்கள், - பேச்சிரண்டு பகரு நாவினர் லோபர்
இருவிதமான பேச்சு பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சர்கள், - தீக் குணங்கள் அதிக பாதகர்
கெட்ட குணங்களையே மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள், - மாதர்மேற் கலன்கள் புனையாதர்
பொது மகளிருக்கு நகைகளைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள், - அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர்
அசடர்கள், பூமியில் வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்து திரிகின்ற மனிதர்கள், - பேதைமார்க்கு இரங்கி யழியு மாலினர்
பெண்கள் மீது காம இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர், - நீதிநூற் பயன்கள் தெரியாத நெறியிலாதவர்
நீதி நூல்களின் பயன் தெரியாது, நன்னெறியில் போகாதவர்கள், - சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர்
சூதாட்டத்தால் மற்றவர் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், - மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பால்
ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் - இத்தகையோரிடம் சென்று, - சிறந்த தமிழ்கூறி
நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, - நினைவு பாழ்பட வாடிநோக்கு இழந்து
நினைவு தேய்ந்து, பாழ்பட்டு, வாட்டம் அடைந்து, பார்வை மங்கி, - வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
வறுமை என்ற நெருப்பின்மேல் கிடந்து - நெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி யருள்வாயே
நெளியும் நீண்ட புழுப்போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாயாக. - நறிய வார்குழல் வானநாட்டு அரம்பை மகளிர்
நறுமணத்துடன் கூடிய நீண்ட கூந்தலை உடைய தேவநாட்டுப் பெண்கள் - காதலர் தோள்கள்வேட்டு இணங்கி
தங்கள் காதலர்களுடைய தோள்களை விரும்பித் தழுவி, - நகைகொடு ஏழிசை பாடிமேற் பொலிந்து களிகூர
சிரிப்புடனே ஏழு ஸ்வரங்களிலும்* பாடி மகிழ்ந்து குலவவும், - நடுவிலாத குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர்
நியாயம் இல்லாதவராய், கோபம் மிக்கவராய், அழிவுப்பாதையிலே செல்லும் அசுரர்களின் மனைவியர் - மணாளர்தோட் பிரிந்து நசைபொறாது அழுது
தங்கள் கணவரின் தோள்களைப் பிரிந்து, தமது பிரிவாற்றாமையை அடக்க முடியாமல் அழுது, - ஆகமாய்த்து அழுங்கி யிடர்கூர
தங்கள் உடலைத் தாமே துன்புறுத்தி வருத்தமே பெருகவும், - மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து
அலைகள் பொங்கும் ஆழ்கடலின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டு, - கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
கிளைகள் கோடிக்கணக்காய் கடல் மேல் விரிந்து - வளரு மா இரு கூறதாய்த் தடிந்த வடிவேலா
வளர்ந்த மாமரமாய் நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த வேலாயுதனே, - மருவு காள முகீல்கள்கூட் டெழுந்து
பொருந்திய கரு மேகங்கள் கூட்டமாக எழுந்து, - மதியு லாவிய மாடமேற் படிந்த
நிலவொளி வீசும் உயர்ந்த மாடங்களின் மீது படியும் தலமாம், - வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த பெருமாளே.
வயல்கள் சூழ்ந்த திருநெல்வாயிலில்** அமர்ந்த பெருமாளே.