திருப்புகழ் 748 மாத்திரை யாகிலு (திருவேட்களம்)

தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன ...... தனதான
மாத்திரை  யாகிலு  நாத்தவ  றாளுடன் 
வாழ்க்கையை  நீடென  ......  மதியாமல் 
மாக்களை  யாரையு  மேற்றிடு  சீலிகள் 
மாப்பரி  வேயெய்தி  ......  அநுபோக 
பாத்திர  மீதென  மூட்டிடு  மாசைகள் 
பாற்படு  ஆடக  ......  மதுதேடப் 
பார்க்கள  மீதினில்  மூர்க்கரை  யேகவி 
பாற்கட  லானென  ......  வுழல்வேனோ 
சாத்திர  மாறையு  நீத்தம  னோலய 
சாத்தியர்  மேவிய  ......  பதவேளே 
தாத்தரி  தாகிட  சேக்கெனு  மாநட 
தாட்பர  னார்தரு......  குமரேசா 
வேத்திர  சாலம  தேற்றிடு  வேடுவர் 
மீக்கமு  தாமயில்  ......  மணவாளா 
வேத்தம  தாமறை  யார்த்திடு  சீர்திரு 
வேட்கள  மேவிய  ......  பெருமாளே. 
  • மாத்திரை யாகிலு நாத்தவறாளுடன்
    ஒரு சிறிய அளவு கூட வாக்குத் தவறாத மனைவியுடன்
  • வாழ்க்கையை நீடென மதியாமல்
    நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதியாமல்,
  • மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்
    மிருகங்கள் போன்ற மனிதர்கள் யாராயிருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு அனுபவிக்கும் துர்க்குணப் பொது மாதர்களிடம்
  • மாப்பரிவேயெய்தி
    மிக்க அன்பைப் பூண்டு,
  • அநுபோக பாத்திரம் ஈதென
    வேசையர்களை அனுபவிக்கும் பாத்திரம் இவன் என்று பிறர் ஏச,
  • மூட்டிடு மாசைகள் பாற்படு
    மூண்டு எழுகின்ற ஆசைகளில் ஈடுபட்டு,
  • ஆடகம் அதுதேட
    (வேசையர்க்குக் கொடுக்கப்) பொன்னைத் தேட
  • பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
    பூமியிலுள்ள மூர்க்க லோபிகளையே எனது கவிகளில்
  • பாற்கடலானென உழல்வேனோ
    பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று வீணுக்குப் புகழ்ந்து திரிவேனோ?
  • சாத்திரம் ஆறையு நீத்த மனோலய
    ஆறு* சாஸ்திரங்களையும் கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல
  • சாத்தியர் மேவிய பதவேளே
    சாமர்த்தியசாலிகள் போற்றும் திருவடிகளை உடைய வேளே,
  • தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
    தாத்தரி தாகிட சேக் என்ற தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும்
  • தாட் பரனார்தரு குமரேசா
    பாதங்களை உடைய நடராஜப் பெருமான் தந்த குமரேசனே,
  • வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர்
    அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்களின்
  • மீக்கு அமுதாமயில் மணவாளா
    மிக்க அமுதைப் போன்ற, மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே,
  • வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர்
    அறியப் படுவதான வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய
  • திருவேட்கள மேவிய பெருமாளே.
    திருவேட்களத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com