திருப்புகழ் 742 வெகு மாய வித (திருத்துறையூர்)

தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய  விதத்துரு  வாகிய 
திறமேப  ழகப்படு  சாதக 
விதமேழ்க  டலிற்பெரி  தாமதில்  ......  சுழலாகி 
வினையான  கருக்குழி  யாமெனு 
மடையாள  முளத்தினின்  மேவினும் 
விதியாரும்  விலக்கவொ  ணாதெனு  ......  முதியோர்சொல் 
தகவாம  தெனைப்பிடி  யாமிடை 
கயிறாலு  மிறுக்கிம  காகட 
சலதாரை  வெளிக்கிடை  யேசெல  ......  வுருவாகிச் 
சதிகாரர்  விடக்கதி  லேதிரள் 
புழுவாக  நெளித்தெரி  யேபெறு 
மெழுகாக  வுருக்குமு  பாதிகள்  ......  தவிர்வேனோ 
உககால  நெருப்பதி  லேபுகை 
யெழவேகு  முறைப்படு  பாவனை 
யுறவேகு  கையிற்புட  மாய்விட  ......  வெளியாகி 
உலவாந  ரகுக்கிரை  யாமவர் 
பலவோர்கள்  தலைக்கடை  போயெதிர் 
உளமாழ்கி  மிகக்குழை  வாகவு  ......  முறவாடித் 
தொகலாவ  தெனக்கினி  தானற 
வளமாக  அருட்பத  மாமலர் 
துணையேப  ணியத்தரு  வாய்பரி  ......  மயில்வேலா 
துதிமாத  வர்சித்தர்ம  கேசுரர் 
அரிமால்பி  ரமர்க்கருள்  கூர்தரு 
துறையூர்ந  கரிற்குடி  யாய்வரு  ......  பெருமாளே. 
  • வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப் படு சாதக விதம் ஏழ் கடலில் பெரிதாம்
    எண்ணிலாத மாய வகைகளால் உடலாக உருவெடுக்கும் இயல்பிலே பழகப்படுகின்ற பிறப்பு வகைகள் ஏழு கடல்களைக் காட்டிலும் பெரிதாகும்.
  • அதில் சுழலாகி வினையான கருக் குழியாம் எனும் அடையாளம் உ(ள்)ளத்தினின் மேவினும்
    அத்தகைய பிறப்பில் சுழன்று வினைக்கு ஈடான கருக்குழி சேரும் என்கின்ற அறிகுறியானது என் உள்ளத்தில் பதிந்து இருந்த போதிலும்,
  • விதி யாரும் விலக்க ஒணாது எனும் முதியோர் சொல் தகவாம்
    விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற மூத்தோர் வாசகம் பொருத்தமானது.
  • அது எனைப் பிடியா மிடை கயிறாலும் இறுக்கி
    அந்த விதி என்னைப் பிடித்து நெருங்கிய கயிற்றால் அழுத்தமாகக் கட்டி
  • மகா கட(ம்) சல தாரை வெளிக்கு இடையே செல உருவாகி
    பெரிய உடம்பிலுள்ள சாக்கடை வழியே உருவம் அடைந்து (குழந்தையாய்) வெளிவர,
  • சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து
    மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேட்டைகளுடன், மாமிசத்தில் திரண்டு புழுப் போல நெளிவுண்டு,
  • எரியே பெறு மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ
    நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல உடலை உருக்குகின்ற வேதனைகளையும் ஒழிக்க மாட்டேனோ?
  • உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை உறவே
    யுகாந்த காலத்தில் வடவாமுகா அக்னி நெருப்பில் புகை உண்டாகி வேகின்ற மாதிரி கோபக் குறிகளை (இரக்க வந்தவரிடம்) காட்டி,
  • குகையில் புடமாய் விட வெளியாகி உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள்
    உலையில் புடம் வைப்பது போல் உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளிவருவதால், அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பலருடைய
  • தலைக் கடை போய் எதிர் உ(ள்)ளம் மாழ்கி மிகக் குழைவாகவும் உறவாடித் தொகலாவது எனக்கு இனிதான் அற
    வீட்டு வாசலுக்குப் போய் அவர்கள் எதிரே நின்று, மனம் வெட்கப்பட்டு, மிகவும் குழைந்த மனத்தினனாய் அவர்களுடன் உறவு பூண்டு சேர்தல் எனக்கு இனியேனும் ஒழிவதற்காகவும்,
  • வளமாக அருள் பாதம் மா மலர் துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா
    நான் செப்பம் அடையவும், உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்களை எனக்குத் துணையாக, நான் தொழுவதற்குத் தருவாயாக, மயிலையும் வேலையும் உடையவனே,
  • துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள் கூர் தரு
    துதிக்கின்ற பெரிய தவசிகளும், சித்தர்களும், சிவன், திருமால், பிரமன் இவர்களுக்கு எல்லாம் திருவருள் பாலிக்கும்,
  • துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே.
    திருத்துறையூர்* என்னும் ஊரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com