திருப்புகழ் 743 கோல மறை (திருநாவலூர்)

தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
கோல  மறை  யொத்த  மாலைதனி  லுற்ற 
கோரமதன்  விட்ட  ......  கணையாலே 
கோதிலத  ருக்கள்  மேவுபொழி  லுற்ற 
கோகிலமி  குத்த  ......  குரலாலே 
ஆலமென  விட்டு  வீசுகலை  பற்றி 
ஆரழலி  றைக்கு  ......  நிலவாலே 
ஆவிதளர்  வுற்று  வாடுமெனை  நித்த 
மாசைகொட  ணைக்க  ......  வரவேணும் 
நாலுமறை  கற்ற  நான்முகனு  தித்த 
நாரணனு  மெச்சு  ......  மருகோனே 
நாவலர்ம  திக்க  வேல்தனையெ  டுத்து 
நாகமற  விட்ட  ......  மயில்வீரா 
சேலெனும்  விழிச்சி  வேடுவர்  சிறுக்கி 
சீரணி  தனத்தி  ......  லணைவோனே 
சீதவயல்  சுற்று  நாவல்தனி  லுற்ற 
தேவர்சிறை  விட்ட  ......  பெருமாளே. 
  • கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட கணையாலே
    அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும், கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும்,
  • கோதில தருக்கள் மேவு பொழிலுற்ற கோகில மிகுத்த குரலாலே
    குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும்,
  • ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழல் இறைக்கு நிலவாலே
    விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும்,
  • ஆவி தளர்வுற்று வாடுமெனை நித்தம் ஆசைகொடு அணைக்க வரவேணும்
    ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும்.
  • நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனு மெச்சு மருகோனே
    நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே,
  • நாவலர் மதிக்க வேல்தனை யெடுத்து நாகமற விட்ட மயில்வீரா
    புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே,
  • சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தில் அணைவோனே
    சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப் பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே,
  • சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட பெருமாளே.
    குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்* வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com