தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
- ஆர் அத் தன பாரத் துகில் மூடிப் பலர் காணக் கையில் யாழ்
வைத்து இசை கூர
முத்து மாலை அணிந்துள்ள அந்த மார்பின் பாரங்களை புடைவையால் மூடி, பலரும் வியந்து பார்க்க கையிலே யாழை வைத்து இசை நிரம்பப் பாடி, - குழல் உடை சோர ஆகம் பனி நீர் அப் புழுகு ஓடக் குழை
ஆடப் பிரையாசைப் படுவார்
கூந்தலும் உடையும் சரிய, உடலில் பன்னீருடன் புனுகு கலந்து பாய, (காதில் அணிந்துள்ள) குண்டலங்கள் ஆடவும், முயற்சி செய்பவர்கள். - பொட்டு அணி சசி நேர் வாள் கூரக் கணை வேல் கண் கயல்
போலச் சுழல்வார்
பொட்டு அணிந்துள்ள சந்திரன் போன்ற முகத்தில் வாளாயுதம், கூர்மையான அம்பு, வேல் (இவை போன்ற) விழிகள் கயல் மீனைப் போல் சுழற்றுபவர்கள். - சர்க்கரை கோவைக் கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் கோலக்
குயிலார்
சர்க்கரையை ஒத்த இனிய மொழிகள் வரும் கொவ்வைக் கனியை ஒத்த வாயில் பற்கள் சூரிய சந்திரன் போல் ஒளி வீசும். அழகிய குயில் போலப் பேசுபவர்கள். - பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோபச் செயலார்
பித்தர்கள் உறவு ஆமோ
பட்டுப் புடைவயை நூல் போல் நுண்ணிய இடையில் அணிந்தவர்கள். சித்திரம் போல கோபச் செயல்கள் நிரம்பியுள்ள பித்துப் பிடித்தவர்களாகிய பொது மகளிர்களின் தொடர்பு எனக்கு வேண்டுமோ? - பூரித் தன பாரச் சடை வேதக் குழலாள் பத்தர்கள் பூசைக்கு
இயல்வாள் பத்தினி சிவகாமி
நிறைந்துள்ள மார்பகப் பாரத்தையும், சடையையும், வேத சொரூபக் கூந்தலையும் உடையவள், பக்தர்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுபவள், பத்தினி, சிவகாமி, - பூமிக் கடல் மூவர்க்கும் மு(ன்)னாள் பத்திர காளிப் புணர்
போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
பூமி, கடல், அரி, அயன், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் முன்னவள், பத்திர காளி ஆகிய பார்வதி அணைந்து சேரும் இன்ப அனுபவம் உடைய சிவபெருமானுக்கும் உபதேசித்து அருளிய குருநாதனே, - சூரக் குவடு ஆழித் தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு
இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
சூரனும், கிரெளஞ்ச மலையும், கடலும் தவிடு பொடிபட, பொருத அசுரர்கள் மெலிந்து அழிய, அயற்சி இல்லாத வீரம் உள்ள ஒளி வீசும் வேலை விட்டுச் செலுத்திய வெற்றி வீரனே, - தோகைச் செயலாள் பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய பெருமாளே.
மயில் போன்ற நடை உடையவள், அழகிய ஒளியுடைய குறப் பெண்ணாகிய வள்ளி என்கின்ற முத்துப்போன்ற தேவியுடன் ஒளி வீசும் துறையூர்* என்ற தலத்தை விரும்பிய பெருமாளே.