திருப்புகழ் 740 அரியயன் அறியாதவர் (வடுகூர்)

தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
அரியய  னறியா  தவரெரி  புரமூ 
ணதுபுக  நகையே  ......  வியநாதர் 
அவிர்சடை  மிசையோர்  வனிதையர்  பதிசீ 
றழலையு  மழுநேர்  ......  பிடிநாதர் 
வரைமக  ளொருகூ  றுடையவர்  மதனா 
கமும்விழ  விழியே  ......  வியநாதர் 
மனமகிழ்  குமரா  எனவுன  திருதாள் 
மலரடி  தொழுமா  ......  றருள்வாயே 
அருவரை  யிருகூ  றிடவொரு  மயில்மேல் 
அவனியை  வலமாய்  ......  வருவோனே 
அமரர்க  ளிகல்நீ  டசுரர்கள்  சிரமேல் 
அயில்தனை  விசையாய்  ......  விடுவோனே 
வரிசையொ  டொருமா  தினைதரு  வனமே 
மருவியொர்  குறமா  ......  தணைவேடா 
மலைகளில்  மகிழ்வாய்  மருவிநல்  வடுகூர் 
வருதவ  முநிவோர்  ......  பெருமாளே. 
  • அரியயன் அறியாதவர்
    திருமாலும் பிரமனும் அடி முடி காணமுடியாதவர்,
  • எரி புரமூணதுபுக நகை ஏவியநாதர்
    நெருப்பு திரிபுரத்திலும் புகுமாறு சிரித்தே எரித்த தலைவர்,
  • அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி
    விளங்கும் சடை மீது கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் இருப்பவர்,
  • சீறழலையும் மழுநேர்பிடிநாதர்
    சீறிவந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர்,
  • வரைமக ளொருகூ றுடையவர்
    மலைமகளாம் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர்,
  • மதனாகமும்விழ விழியேவியநாதர்
    மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர்,
  • மனமகிழ் குமரா
    (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே,
  • என உனது இருதாள் மலரடி
    என்று கூறி உன் இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை
  • தொழுமாறு அருள்வாயே
    வணங்கும்படி அருள் தருவாயாக.
  • அருவரை யிருகூ றிட
    அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் செய்து,
  • ஒருமயில்மேல் அவனியை வலமாய் வருவோனே
    ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே,
  • அமரர்கள் இகல் நீடு அசுரர்கள்
    தேவர்களின் பகைவராம் பெரும் அசுரர்களின்
  • சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே
    தலைகள் மீது வேலை வேகமாய் எறிந்தவனே,
  • வரிசையொடு ஒருமா தினைதரு வனமே மருவி
    வரிசையாக ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று,
  • யொர் குறமாது அணைவேடா
    ஓர் குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே,
  • மலைகளில் மகிழ்வாய்
    குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே,
  • மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே.
    மனம் பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com