திருப்புகழ் 732 அச்சா யிறுக்காணி (தச்சூர்)

தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான
அச்சா  யிறுக்காணி  காட்டிக்  கடைந்த 
செப்பார்  முலைக்கோடு  நீட்டிச்  சரங்க 
ளைப்போல்  விழிக்கூர்மை  நோக்கிக்  குழைந்து  ......  உறவாடி 
அத்தா  னெனக்காசை  கூட்டித்  தயங்க 
வைத்தா  யெனப்பேசி  மூக்கைச்  சொறிந்து 
அக்கா  லொருக்கால  மேக்கற்  றிருந்தி  ......  ரிலையாசை 
வைச்சா  யெடுப்பான  பேச்சுக்  கிடங்க 
ளொப்பா  ருனக்கீடு  பார்க்கிற்  கடம்பன் 
மட்டோ  எனப்பாரின்  மூர்க்கத்  தனங்க  ......  ளதனாலே 
மைப்பா  கெனக்கூறி  வீட்டிற்  கொணர்ந்து 
புற்பா  யலிற்காலம்  வீற்றுக்  கலந்து 
வைப்பார்  தமக்காசை  யாற்பித்  தளைந்து  ......  திரிவேனோ 
எச்சாய்  மருட்பாடு  மேற்பட்  டிருந்த 
பிச்சா  சருக்கோதி  கோட்டைக்  கிலங்க 
மிக்கா  நினைப்போர்கள்  வீக்கிற்  பொருந்தி  ......  நிலையாயே 
எட்டா  மெழுத்தேழை  யேற்குப்  பகர்ந்த 
முத்தா  வலுப்பான  போர்க்குட்  டொடங்கி 
யெக்கா  லுமக்காத  சூர்க்கொத்  தரிந்த  ......  சினவேலா 
தச்சா  மயிற்சேவ  லாக்கிப்  பிளந்த 
சித்தா  குறப்பாவை  தாட்குட்  படிந்து 
சக்கா  கியப்பேடை  யாட்குப்  புகுந்து  ......  மணமாகித் 
தப்பா  மலிப்பூர்வ  மேற்குத்  தரங்கள் 
தெற்கா  குமிப்பாரில்  கீர்த்திக்  கிசைந்த 
தச்சூர்  வடக்காகு  மார்க்கத்  தமர்ந்த  ......  பெருமாளே. 
  • அச்சாய் இறுக்கு ஆணி காட்டிக் கடைந்த செப்பு ஆர் முலைக் கோடு நீட்டி
    வலிமை உள்ளதாய், அழுந்தப் பதிந்துள்ள இரும்பாணி போன்றதும், கடைந்து எடுக்கப்பட்ட சிமிழ் போன்றதுமான மலையாகிய மார்பகங்களை முன் காட்டியும்,
  • சரங்களைப் போல் விழிக் கூர்மை நோக்கிக் குழைந்து உறவாடி
    அம்புகளைப் போல கண்களால் நுண்மையாகப் பார்த்து மனம் நெகிழ்ச்சி காட்டி உறவாடியும்,
  • அத்தான் எனக்கு ஆசை கூட்டித் தயங்க வைத்தாய் எனப் பேசி மூக்கைச் சொறிந்து
    அத்தான் என அழைத்து எனக்கு ஆசையை ஏற்படுத்தி, நீ என்னை வாடும்படி வைத்து விட்டாய் என்று பேசி மூக்கை ஆசையுடன் வருடிவிட்டு,
  • அக்கால் ஒருக்காலம் ஏக்கற்று இருந்திர் இ(ல்)லை ஆசை வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள்
    முன்பு ஒரு காலத்தில் ஆசையால் விரும்பி எம்மிடம் வந்திருந்தீர். (இப்போது உமக்கு) என்னிடம் ஆசை இல்லை. நிந்தையான பேச்சுக்கு நீ இடம் தந்து விட்டாய்.
  • ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் மட்டோ எனப் பாரின் மூர்க்கத்தனங்கள் அதனாலே மைப்பாகு எனக் கூறி
    யோசித்துப் பார்க்கும் பொழுது உனக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை, முருகன் முதலாக உனக்கு ஒப்பானவர்கள் யாரும் இல்லை என்று கூறி இவ்வுலகில் மூர்க்கத்தனங்கள் கொண்ட செய்கைகளாலே கரிய வெல்லக் கட்டி போல இனிக்கப் பேசி,
  • வீட்டில் கொணர்ந்து புல்பாயலில் காலம் வீற்றுக் கலந்து வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ
    தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் கோரைப் புல் பாயில் கிடத்தி, தக்க சமயத்தில் தனித்துக் கலவி செய்துவைக்கும் விலைமாதர்கள் மேல் மோகம் பூண்ட காரணத்தால் பைத்தியம் பிடித்துத் திரிவேனோ?
  • எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சு ஆசருக்கு ஓதி
    (எல்லாவற்றுக்கும் கடைசியில்) எஞ்சி இருக்கும் பொருளாய் மயக்கம் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவனே,
  • கோட்டைக்கு இலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே
    மனம் என்னும் கோட்டையில் விளங்கும்படி மிக அதிகமாக தியானிப்பவர்களின் பக்தி என்னும் கட்டுக்குள் அகப்பட்டு நிலைப்பவன் நீ அன்றோ?
  • எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த முத்தா
    தமிழில் 'அ' என்னும் எழுத்தை (இது சிவத்தைக் குறிக்கும் என்று) ஏழையாகிய எனக்கு உபதேசித்த முக்திக்கு வித்தே,
  • வலுப்பான போர்க்குள் தொடங்கி எக்காலும் மக்காத சூர்க் கொத்து அரிந்த சினவேலா
    வலிய போரில் தலையிட்டு, எப்போதும் அழிந்து போகாத சூரனையும் அவன் குடும்பத்தையும் அரிந்து தள்ளின கோபம் கொண்ட வேலை ஆயுதமாகக் கொண்டவனே,
  • தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த சித்தா
    (சூரனாகிய மாமரத்திலிருந்து) ஒரு தச்சனைப்* போல மயிலையும் சேவலையும் வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே,
  • குறப்பாவை தாட்குள் படிந்து சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து மணமாகி
    குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவடியைப் படிந்து வணங்கி, அவளுக்குக் கண் போல இனியனாகி, (அவள் இருக்கும் இடத்துக்குப்) போய் அவளை மணந்து,
  • தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள் தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கு இசைந்த தச்சூர்** வடக்காகு(ம்) மார்க்கத்து அமர்ந்த பெருமாளே.
    தவறுதல் இன்றி இந்தக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊர் வடக்கே அமைந்துள்ள வழியில் (இப்போது ஆண்டார் குப்பம் என வழங்கப்படும் தலத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com