தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன ...... தனதான
கால முகிலென நினைவுகொ டுருவிலி
காதி யமர்பொரு கணையென வடுவகிர்
காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங்
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
காசி னளவொரு தலையணு மனதினர்
காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ்
சால மயல்கொடு புளகித கனதன
பார முறவண முருகவிழ் மலரணை
சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச்
சாதி குலமுறு படியினின் முழுகிய
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
வேடை கெடவமு தருளிய பொழுதினில்
வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
வாகு முடியொரு பதுகர மிருபது
மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே
வாச முறுமலர் விசிறிய பரிமள
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.
- கால முகில் என நினைவு கொ(ண்)டு உருவு இலி காதி அமர்
பொரு கணை என
உரிய காலத்தில் பெய்த மழையைக் கண்டால் வரும் மகிழ்ச்சியைப் போல் உருவம் இல்லாதவனான மன்மதன் கொல்வதற்குப் போரிட விட்ட அம்பு எனவும், - வடு வகிர் காணும் இது என இளைஞர்கள் விதவிடு(ம்)
கயலாலும்
மாவடுவின் கீற்று எனவும், வந்து இதைப் பாருங்கள் என்றும் இளைஞர்கள் மிகுந்துரைக்கும் கயல் மீன் போன்ற கண்களாலும், - கானம் அமர் குழல் அரிவையர் சிலு(க்) கொடு காசின் அளவு
ஒருதலை அ(ண்)ணும் மனதினர்
காடு போன்ற கூந்தலை உடைய விலைமாதர்கள் சண்டைக் கூச்சலுடன், (கொடுத்த) பொருளுக்குத் தக்கபடி ஒருதலைக் காமம் பொருந்திய மனம் கொண்டவராய், - காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் சால
மயல் கொடு
இத்தகைய பொய்க்காமம் கொண்ட சில கபட நெஞ்சத்தினராய் வஞ்சனைப் பேச்சு பேசும் காமசாஸ்திரங்களாலும் மிக்க மோகம் கொண்டு, - புளகித கன தன பாரம் உற அ(ண்)ண முருகு அவிழ் மலர்
அணை
புளகாங்கிதம் பூண்ட கனத்த மார்பின் பாரம் அழுந்த, பொருந்திய வாசனை வீசுகின்ற மலர்ப் படுக்கை உள்ள - சாயல் தனில் மிகு கலவியில் அழிவு உறும் அடியேனை
துயிலில் மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவுறும் அடியேனை, - சாதி குலம் உறு படியினின் முழுகிய தாழ்வு அது அற
சாதி குலம் முதலியவை உள்ள இப் பூமியில் வந்து பிறந்து, முற்றும் அனுபவிக்கின்ற சிறுமை நீங்க, - இடை தருவன வெளி உயர் தாள் அது அடைவது தவம் மிக
நினைவது தருவாயே
வழி வந்து உதவுகின்ற பர வெளியில் உள்ள திருவடியை அடைவதையும், தவ நெறியை மிகவும் நினைப்பதையும் தந்து அருளுவாயாக. - வேலை தனில் விழி துயில்பவன் அரவணை
பாற்கடலில் ஆதி சேஷனாகிய பாம்புப் படுக்கை மேல் கண் துயில்பவன், - வேயின் இசை அது நிரை தனில் அருள்பவன்
புல்லாங்குழலின் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன், - வீர துரகத நர பதி
வீரமுள்ள குதிரைகளைச் செலுத்தின சாரதியான கண்ணபிரான், அருச்சுனனுக்குக் குரு, - வேறு வடிவு கொடு உறி வெ(ண்)ணெய் தயிர் அது வேடை
கெட அமுது அருளிய பொழுதினில்
வேறே உருவம் கொண்டு உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும் வேட்கை தீர அனைவருக்கும் அமுதைப் பங்கிட்டு அருளியபோதில், - வனிதையர் கரம் மீதே வீசு கயிறு உடன் அடிபடு சிறியவன்
மாதர்களின் கையால், எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன், - அதி கோப வாலியுடன் எழு மரம் அற
மிக்க கோபம் கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும், - நிசிசரன் வாகு முடி ஒரு பது(ம்) கரம் இருபது(ம்) மாள ஒரு
சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே
அரக்கனாகிய ராவணனின் அழகிய பத்துத் தலைகளும் இருபது கைகளும் அழியும்படி ஓர் அம்பை விட்ட, ஒப்பற்ற கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, - வாசம் உறு மலர் விசிறிய பரிமள மாதை நகர் தனில் உறையும்
ஒர் அறு முக
நறு மணம் மிக்க மலர்கள் வீசின வாசனையைக் கொண்ட திருவாமாத்தூர்* என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஓர் ஆறுமுகனே, - வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே.
விண்ணுலகத்தினில் இருக்கும் அடியார்களின் துன்பம் நீங்கும்படியாக அருளிய பெருமாளே.