திருப்புகழ் 730 கருமுகில் போல் (திருவாமாத்தூர்)

தனதன தானத் தானன, தனதன தானத் தானன
தனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்  போல்மட்  டாகிய  அளகிகள்  தேனிற்  பாகொடு 
கனியமு  தூறித்  தேறிய  ......  மொழிமாதர் 
கலவிகள்  நேரொப்  பாகிகள்  மதனிகள்  காமக்  க்ரோதிகள் 
கனதன  பாரக்  காரிகள்  ......  செயலோடே 
பொருகயல்  வாளைத்  தாவிய  விழியினர்  சூறைக்  காரிகள் 
பொருளள  வாசைப்  பாடிகள்  ......  புவிமீதே 
பொதுவிகள்  போகப்  பாவிகள்  வசமழி  வேனுக்  கோரருள் 
புரிவது  தானெப்  போதது  ......  புகல்வாயே 
தருவடு  தீரச்  சூரர்கள்  அவர்கிளை  மாளத்  தூளெழ 
சமனிலை  யேறப்  பாறொடு  ......  கொடிவீழத் 
தனதன  தானத்  தானன  எனஇசை  பாடிப்  பேய்பல 
தசையுண  வேல்விட்  டேவிய  ......  தனிவீரா 
அரிதிரு  மால்சக்  ராயுத  னவனிளை  யாள்  முத்  தார்நகை 
அழகுடை  யாள்மெய்ப்  பாலுமை  ......  யருள்பாலா 
அரவொடு  பூளைத்  தார்மதி  அறுகொடு  வேணிச்  சூடிய 
அழகர்தென்  மாதைக்  கேயுறை  ......  பெருமாளே. 
  • கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர்
    கரிய மேகம் போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள். தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள்.
  • கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக் காரிகள் செயலோடே பொரு கயல் வாளைத் தாவிய விழியினர்
    புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள். செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள்.
  • சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசைப் பாடிகள் புவி மீதே பொதுவிகள் போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள் புரிவது தான் எப்போது அது புகல்வாயே
    கொள்ளைக்காரிகள். பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க.
  • தரு அடு தீரச் சூரர்கள் அவர் கிளை மாளத் தூள் எழ சமன் நிலை ஏறப் பாறொடு கொடி வீழ
    கற்பகத் தருவை அழித்த தைரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன் அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர,
  • தனதன தானத் தானன என இசை பாடிப் பேய் பல தசை உ(ண்)ண வேல் விட்டு ஏவிய தனி வீரா
    தனதன தானத் தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய ஒப்பற்ற வீரனே,
  • அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய்ப் பால் உமை அருள் பாலா
    அரி, திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும், முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள், சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற மகனே,
  • அரவொடு பூளைத் தார் மதி அறுகொடு வேணிச் சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே.
    பாம்புடன், பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம் புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும் எழிலுடைய திருவாமாத்தூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com