தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள்பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
- முகில் ஆம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல்
விழியார் சசி முகவார் தரள(ளா)ம் எனவே நகை புரி மாதர்
மேகம் என்று சொல்லத் தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள். கயல் மீன், அம்பு இவைகளைப் போன்ற கண்களை உடையவர்கள். சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். - முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி
நூல் இடை முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார்
மார்பகங்கள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்களைப் போல் விளங்க மணி வட மாலைகள் அசைந்து விளங்க, கொடியைப் போலவும், நூல் போலவும் நுண்ணிய இடையில் வேலைப்பாடு சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். - அகிசேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல்
ஆர்தர ஏய்தரு அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி
பாம்பை ஒத்த பெண்குறியை உடையவர்கள். வாழை போன்ற தொடை அழகினர்கள். சிலம்பு ஒலிக்க, பொருந்திய அழகியர்கள். பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடந்து சென்று, - அ(ன்)னமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா
விடு பாவையர் அவர் பாயலிலே அடியேன் உடல்
அழிவேனோ
அன்னப் பறவை என்னும்படி யாரையும் மோகம் கொள்ளும் கண்களால் சுழல விடுகின்ற பெண்களுடைய படுக்கையில் அடியேன் உடல் அழிபடுவேனோ? - ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை
தூள் பட கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா
விண்ணுலக ஊரில் உள்ளவர்கள் கோ என்று முறையிட இருளைப் போலக் கரிய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும் கடலும், (சூரனது) எழு கிரிகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாகவும் செலுத்திய வேலாயுதனே, - கமல ஆலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய
கருணாகர ஞான பராபரை அருள் பாலா
தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ளவள், கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை உமாதேவி அருளிய குழந்தையே, - மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில்
கோகில(ம்) மகிழ் நாடு உறை மால் வ(ள்)ளி நாயகி
மணவாளா
மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா, பாக்கு மரம் ஆகியவைகளில் விளையாடும் நிலா ஒளி, மயில், குயில் ஆகியவை மகிழ்ந்திருக்கும் நாட்டில் உள்ள வள்ளி மலையில் இருந்த பெருமை மிக்க வள்ளி நாயகியின் கணவனே, - மதி மா முகவா அடியேன் இரு வினை தூள்படவே அயில்
ஏவிய வளவாபுரி வாழ் மயில் வாகன பெருமாளே.
சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே, அடியேனுடைய இருவினைகளும் தூளாகவே அம்பைச் செலுத்தியவனே, வளவா புரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.