தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாப ரசங்கம
மெனவோம்புறு தாவ னவம்படர்
தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடி கவந்தன
முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு
முககாம்பிர மோட மர்சம்பன
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே.
- மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வே(கு)ம்
திணையான தனங்களும்
மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகிய சோர்தலைத் தருபவர்களும் மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருவதான செல்வங்களும், - மடிவேன் தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி மயமாம் பல
பலவான கணம் குலம் என ப்ராந்தியும்
இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய், உற்றாராய்ப் பயனற்றவர்களான பிறர் மயமான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மயக்கமும், - யான் எனது என்று உறுவனவாம் பிரமாத குணம் குறி இன்ப
சாரஇன வா(வு)ம்பரி தான்ய தனம் பதி விட
யான், எனது என்று கூடியுள்ளனவாகிய, அளவு கடந்து செல்லும் குணமும் நோக்கமும், இனிமைக்கும், தக்கதாகப் பொருந்திய தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவை எல்லாம் விட்டு நீங்கும்படி, - ஏன்று எனை மோன தடம் பர மிகுதாம் பதி காண
என்னை ஏற்றுக்கொண்டு, மோன நிலையையும், மேலான மிக்கு நிற்கும் தெய்வத்தையும் நான் கண்டு களிக்க, - கணம் கன உம்பர் ஏசா இட ஆர்ந்தன சானு நயம் பெறு
கடகாம் கர சோண வியம் பர இடமாம் கன தாள் அருளும்
படி என்று தானோ
கூட்டமான பெருமை தங்கிய தேவர்கள் ஏசுதலின்றி (நன்கு பொருந்திய) இடம் கொண்டு நிறைந்துள்ள, முழந்தாள்* நல்லதான, கடகம் அணிந்துள்ள கைகள், சிவந்த உடல், (இவைகளுக்கு) மேலான இடமாகிய, பெருமை பொருந்திய உனது திருவடியை அருளும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ? - தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன
துனங்கிட தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் தமது
ஆம் சுத
தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தன என்ற ஓசைகள் ஒலிக்கும்படியான மிக மேலான நடனத்தைச் செய்கின்ற எம்பிரானாகிய சிவபெருமானுடைய குழந்தையே, - தாபர(ம்) சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் தகு
தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே
அசையாப் பொருள், அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே, - முன வா(வு)ம் பத மூடிக வந்தன(ம்) முயல்வான் பிடி மாடு
இமை ஐங்கரர் முகதா ஆம் பி(ன்)ன
(முருக வேள் நினைக்கும்) முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும், பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே, - மேவுறு சம்ப்ரம சம் கண ஆறு முக காம்பிரமோடு அமர்
சம்ப(ன்)ன
பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே, - மதுராந்தக மா நகரம் திகழ் முருகா அம் திரமோடு அமர்
உம்பர்கள் தம்பிரானே.
மதுராந்தகமாகிய**** சிறந்த நகரில் விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே.