திருப்புகழ் 712 சீர் உலாவிய (திருப்போரூர்)

தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
சீரு  லாவிய  வோதிம  மான  மாநடை  மாமயில் 
சேய  சாயல்க  லாமதி  ......  முகமானார் 
தேனு  லாவிய  மாமொழி  மேரு  நேரிள  மாமுலை 
சேலு  லாவிய  கூர்விழி  ......  குமிழ்நாசி 
தாரு  லாவிய  நீள்குழல்  வேய  ளாவிய  தோளியர் 
சார்பி  லேதிரி  வேனைநி  ......  னருளாலே 
சாம  வேதியர்  வானவ  ரோதி  நாண்மலர்  தூவிய 
தாளில்  வீழ  வினாமிக  ......  அருள்வாயே 
காரு  லாவிய  நீள்புன  வேடர்  மால்வரை  மீதுறை 
காவல்  மாதினொ  டாவல்செய்  ......  தணைவோனே 
காண  ஆகம  வேதபு  ராண  நூல்பல  வோதிய 
கார  ணாகரு  ணாகர  ......  முருகோனே 
போரு  லாவிய  சூரனை  வாரி  சேறெழ  வேல்விடு 
பூப  சேவக  மாமயில்  ......  மிசையோனே 
போதன்  மாதவன்  மாதுமை  பாதி  யாதியு  மேதொழு 
போரி  மாநகர்  மேவிய  ......  பெருமாளே. 
  • சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல்
    பெருமை விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மை வாய்ந்த சாயல்,
  • கலா மதி முகம் ஆனார்
    பூரண சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள்
  • தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை
    தேன் போன்று இனிய அழகிய பேச்சு, மேருமலை போல இளமை விளங்கும் பெரும் மார்பகங்கள்,
  • சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி
    சேல் மீன் போன்ற கூரிய கண்கள், குமிழைப் போன்ற மூக்கு,
  • தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர்
    மாலை விளங்கும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்று வழுக்கும் தோள்களை உடையவர்கள்,
  • சார்பிலே திரிவேனை நின் அருளாலே
    இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற என்னை, உனது திருவருளால்,
  • சாம வேதியர் வானவர் ஓதி நாண் மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே
    சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் விவேகத்தை நிரம்ப அருள் செய்வாயாக.
  • கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே
    மேகம் உலாவும் நீண்ட புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய வள்ளிமலை மேலே இருந்து, காவல் புரிந்த வள்ளி மீது ஆசை கொண்டு அவளை அணைந்தவனே,
  • காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே
    யாவரும் அறிய ஆகமம், வேதம், புராணம் பலவற்றையும் (சம்பந்தராக வந்து தேவாரமாக) ஓதித் துதித்துள்ள மூல காரணனே, கருணாகரனே, முருகனே,
  • போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப
    போர் செய்ய வந்த சூரன் மீது வேலாயுதத்தை ஏவி, கடலும் சேறு படும்படிச் செய்த அரசனே,
  • சேவக மா மயில் மிசையோனே
    வீரனே, அழகிய மயிலின் மீது அமர்வோனே,
  • போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு
    தாமரை மலரில் வாழ்பவன் (பிரமன்), திருமால், உமாதேவியைப் பாதி பாகத்தில் கொண்ட ஆதியாகிய சிவபிரான் ஆகிய மூவரும் தொழுகின்ற
  • போரி மா நகர் மேவிய பெருமாளே.
    திருப் போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com