தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த ...... தனதான
உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்
உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
- உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள்
ஆலையிலே உருக்கி எடுத்த அம்பு போன்ற கண்கள், மலை போன்ற, கச்சு அணிந்த, மார்பகங்கள், - உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் உருச் சேர் நீள்
மருங்குல் பணைத் தோள் ஓதி கொண்டல்
மகிழ்ச்சி நிரம்பும் இளம் பிறையை ஒத்த நெற்றி, நூல் போன்ற மெல்லிய உரு அமைந்த நீண்ட இடை, மூங்கில் போன்ற தோள், மேகம் போன்ற கூந்தல், (இவைகளைக் கொண்டவர்களும்), - உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் அருக்கா மாதர் தங்கள்
வரைக்கே ஓடி
மகிழ்ச்சியாக தங்கள் மேல் விழுந்து திரிகின்றவர்களை அசட்டை செய்கின்றவர்களுமான பொது மாதர்களின் இருப்பிடத்துக்கே ஓடிச்சென்று, - இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதிபாவி
அந்தக் காம வலைக்கே பூண்ட மனத்தினனும், மகா பாவியுமாகிய நான் - அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால்
ஈனம் இன்றி அருள்வாயே
எனது அசட்டுத் தனத்தாலும், மூடுகின்ற மனக் கலக்கத்தாலும், மழுங்கும் இந்தக் கேட்டினாலும், இழிவு அடையாதவாறு அருள் புரிவாயாக. - எருக்கு ஆர் தாளி தும்பை மருச் சேர் போது கங்கையினைச்
சூடு ஆதி நம்பர் புதல்வோனே
எருக்கு, ஆத்தி, அறுகு, தும்பை மலர், வாசனை பொருந்திய மலர்கள், கங்கை ஆறு இவைகளைச் சூடும் முதற் பொருளாகிய சிவபெருமானது மகனே, - இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில்
இருப்பாய் யானை தங்கும் மணி மார்பா
ரிக்வேத மந்திரத்தால் போற்றித் துதி செய்வோருடைய நாவிலும் மனதிலும் இருப்பவனே, தேவயானை அணையும் அழகிய மார்பனே, - செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல்
கை கொண்ட முருகோனே
ஆணவத்தால் மிக்கு எழுந்த, கடலில் மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரன் அழியும்படி வென்ற வெற்றி வாய்ந்த வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, - தினைக்கு ஓர் காவல் கொண்ட குறத் தேன் மாது பங்க
தினைப் புனத்துக்கு ஒரு காவல் கொண்டிருந்த, குறவர் குலத்துக்குத் தேன் போன்ற மாதாகிய வள்ளிக்கு மணாளனாகப் பக்கத்திலேயே உள்ளவனே, - திருப் போரூர் அமர்ந்த பெருமாளே.
திருப்போரூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.