திருப்புகழ் 706 ஞால மெங்கும் (கோடைநகர்)

தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால  மெங்கும்  வளைத்த  ரற்று  ......  கடலாலே 
நாளும்  வஞ்சி  யருற்று  ரைக்கும்  ......  வசையாலே 
ஆலமுந்து  மதித்த  ழற்கும்  ......  அழியாதே 
ஆறி  ரண்டு  புயத்த  ணைக்க  ......  வருவாயே 
கோல  மொன்று  குறத்தி  யைத்த  ......  ழுவுமார்பா 
கோடை  யம்பதி  யுற்று  நிற்கு  ......  மயில்வீரா 
கால  னஞ்ச  வரைத்தொ  ளைத்த  ......  முதல்வானோர் 
கால்வி  லங்கு  களைத்த  றித்த  ......  பெருமாளே. 
  • ஞாலமெங்கும் வளைத்து அரற்று கடலாலே
    உலகத்தை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சலிடும் கடலாலே,
  • நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே
    நாள்தோறும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறும் வசைமொழிகளினாலே,
  • ஆலம் உந்து மதித் தழற்கும் அழியாதே
    விஷக்கதிர்களைச் செலுத்துகிற சந்திரன் (உன்னைப் பிரிந்து தவிக்கும்) இவள் மீது வீசும் நெருப்பாலே, அழிந்து போகாதவாறு,
  • ஆறிரண்டு புயத்தணைக்க வருவாயே
    உன் பன்னிரண்டு புயங்களினாலும் இவளை அணைத்துக்கொள்ள நீ வரமாட்டாயா?
  • கோலம் ஒன்று குறத்தியைத் தழுவுமார்பா
    அழகு பொருந்திய குறத்தி வள்ளியை அணைக்கும் மார்பனே,
  • கோடையம்பதி யுற்று நிற்கு மயில்வீரா
    கோடைநகரில்* வந்து வீற்றிருக்கும் மயில் வீரனே,
  • காலனஞ்ச வரைத்தொளைத்த முதல்
    யமனும் நடுங்க கிரெளஞ்சமலையைத் தொளை செய்த முதல்வனே,
  • வானோர் கால்வி லங்குகளைத் தறித்த பெருமாளே.
    தேவர்களுக்கு சூரன் பூட்டிய கால் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com