திருப்புகழ் 707 தோழமை கொண்டு (கோடைநகர்)

தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை  கொண்டுச  லஞ்செய்  குண்டர்கள் 
ஓதிய  நன்றிம  றந்த  குண்டர்கள் 
சூழ்விர  தங்கள்க  டிந்த  குண்டர்கள்  ......  பெரியோரைத் 
தூஷண  நிந்தைப  கர்ந்த  குண்டர்கள் 
ஈவது  கண்டுத  கைந்த  குண்டர்கள் 
சூளுற  வென்பதொ  ழிந்த  குண்டர்கள்  ......  தொலையாமல் 
வாழநி  னைந்துவ  ருந்து  குண்டர்கள் 
நீதிய  றங்கள்சி  தைந்த  குண்டர்கள் 
மானவ  கந்தைமி  குந்த  குண்டர்கள்  ......  வலையாலே 
மாயையில்  நின்றுவ  ருந்து  குண்டர்கள் 
தேவர்கள்  சொங்கள்க  வர்ந்த  குண்டர்கள் 
வாதைந  மன்றன்வ  ருந்தி  டுங்குழி  ......  விழுவாரே 
ஏழு  மரங்களும்  வன்கு  ரங்கெனும் 
வாலியு  மம்பர  மும்ப  ரம்பரை 
ராவண  னுஞ்சது  ரங்க  லங்கையு  ......  மடைவேமுன் 
ஈடழி  யும்படி  சந்த்ர  னுஞ்சிவ 
சூரிய  னுஞ்சுர  ரும்ப  தம்பெற 
ராம  சரந்தொடு  புங்க  வன்திரு  ......  மருகோனே 
கோழி  சிலம்பந  லம்ப  யின்றக 
லாப  நடஞ்செய  மஞ்சு  தங்கிய 
கோபுர  மெங்கும்வி  ளங்கு  மங்கல  ......  வயலூரா 
கோமள  அண்டர்கள்  தொண்டர்  மண்டலர் 
வேல  னெனும்பெய  ரன்பு  டன்புகழ் 
கோடை  யெனும்பதி  வந்த  இந்திரர்  ......  பெருமாளே. 
  • தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள்
    நட்பைக் காட்டிப் பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர்,
  • ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
    போதித்த நன்றியை மறந்த கீழோர்,
  • சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள்
    அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர்,
  • பெரியோரைத் தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள்
    பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர்,
  • ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
    மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர்,
  • சூளுற வென்பதொழிந்த குண்டர்கள்
    சத்திய வார்த்தை என்பதையே ஒழித்த கீழோர்,
  • தொலையாமல் வாழநினைந்து வருந்து குண்டர்கள்
    எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர்,
  • நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள்
    நீதியையும், தர்மத்தையும் அழித்த கீழோர்,
  • மானவகந்தைமிகுந்த குண்டர்கள்
    குற்றமும், ஆணவமும் மிகுந்துள்ள கீழோர்,
  • வலையாலே மாயையில் நின்றுவருந்து குண்டர்கள்
    பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர்,
  • தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள்
    தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும்
  • வாதை நமன்றன்வருந்திடுங்குழி விழுவாரே
    வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர்.
  • ஏழு மரங்களும் வன்குரங்கெனும் வாலியும்
    மராமரம் ஏழும், வலிய குரங்காகிய வாலியும்,
  • அம்பரமும்பரம்பரை ராவணனுஞ்சதுரங்க லங்கையும்
    கடலும், அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும்,
  • அடைவேமுன்ஈடழியும்படி
    யாவுமே முன்பே வலிமை குன்றி அழியும்படியும்,
  • சந்த்ரனுஞ் சிவசூரிய னுஞ்சுரரும் பதம்பெற
    சந்திரனும், சிவ சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும்,
  • ராம சரந்தொடு புங்கவன்திரு மருகோனே
    ராமசரம் என்ற ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர மூர்த்தியின் அழகிய மருகனே,
  • கோழி சிலம்ப நலம்ப யின்ற கலாப நடஞ்செய
    சேவல் கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய,
  • மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்விளங்கு மங்கல வயலூரா
    மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூர் வாசனே,
  • கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
    அழகிய தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும்,
  • வேல னெனும்பெய ரன்புடன்புகழ்
    வேலன் என்ற பெயரை அன்புடன் புகழ்கின்ற பெருமாளே,
  • கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே.
    கோடைநகர்* என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com