திருப்புகழ் 705 ஏறு ஆனாலே (கோடைநகர்)

தானா தானா தானா தானா
தானா தானா ...... தனதானா
ஏறா  னாலே  நீறாய்  மாயா 
வேளே  வாசக்  ......  கணையாலே 
ஏயா  வேயா  மாயா  வேயா 
லாமே  ழோசைத்  ......  தொளையாலே 
மாறா  யூறா  யீறாய்  மாலாய் 
வாடா  மானைக்  ......  கழியாதே 
வாராய்  பாராய்  சேரா  யானால் 
வாடா  நீபத்  ......  தொடைதாராய் 
சீறா  வீறா  ஈரேழ்  பார்சூழ் 
சீரார்  தோகைக்  ......  குமரேசா 
தேவா  சாவா  மூவா  நாதா 
தீரா  கோடைப்  ......  பதியோனே 
வேறாய்  மாறா  யாறா  மாசூர் 
வேர்போய்  வீழப்  ......  பொருதோனே 
வேதா  போதா  வேலா  பாலா 
வீரா  வீரப்  ......  பெருமாளே. 
  • ஏறு ஆனாலே
    காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும்,
  • நீறு ஆய் மாயா வேளே(வு) வாசக் கணையாலே
    சாம்பலாகியும் அழிவுபடாத மன்மத வேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்ப பாணத்தாலும்,
  • ஏயாய் ஏயாய் மாயா
    பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி
  • வேயால் ஆம் ஏழு ஓசைத் தொளையாலே
    புல்லாங்குழலில் உண்டாகும் ஏழு சுரங்கள்கொண்ட இசையைத் தரும் தொளைகளாலும்,
  • மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே
    எழிலும் நிறமும் மாறுதல் உற்று, துன்பமுற்று, உயிரே முடிவடைந்ததுபோல் ஆகி, ஒரே மோக மயக்கமாய் வாடுகின்ற மான்போன்ற இந்தப் பெண்ணை நீ ஒதுக்காமல்,
  • வாராய் பாராய் சேராயானால் வாடா நீபத் தொடை தாராய்
    வந்து பார்த்துவிட்டு இவளுடன் சேர்வதற்கு மனம் இல்லை என்றாலும், உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளுக.
  • சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகைக் குமரேசா
    சீறி எழுந்து வீறுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த, மயில் வாகனக் குமரேசா,
  • தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் பதியோனே
    தேவனே, இறப்பு இல்லாத மூப்பு அடையாத நாதனே, தைரியம் உடையவனே, கோடைப் பதியில்* வீற்றிருப்பவனே,
  • வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழப் பொருதோனே
    வேறுபட்ட மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரன் வேரற்று அடியோடு விழும்படி சண்டை செய்தவனே,
  • வேதா போதா வேலா பாலா வீரா வீரப் பெருமாளே.
    பிரமனுக்கு அறிவு ஊட்டியவனே, வேலனே, பாலனே, வீரனே, வீரம் வாய்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com