திருப்புகழ் 696 நிரைதரு மணியணி (திருமயிலை)

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
நிரைதரு  மணியணி  யார்ந்த  பூரித 
ம்ருகமத  களபகில்  சாந்து  சேரிய 
இளமுலை  யுரமிசை  தோய்ந்து  மாமல  ......  ரணைமீதே 
நெகிழ்தர  அரைதுகில்  வீழ்ந்து  மாமதி 
முகம்வெயர்  வெழவிழி  பாய்ந்து  வார்குழை 
யொடுபொர  இருகர  மேந்து  நீள்வளை  ......  யொலிகூர 
விரைமலர்  செறிகுழல்  சாய்ந்து  நூபுர 
மிசைதர  இலவிதழ்  மோந்து  வாயமு 
தியல்பொடு  பருகிய  வாஞ்சை  யேதக  ......  வியனாடும் 
வினையனை  யிருவினை  யீண்டு  மாழ்கட 
லிடர்படு  சுழியிடை  தாழ்ந்து  போமதி 
யிருகதி  பெறஅருள்  சேர்ந்து  வாழ்வது  ......  மொருநாளே 
பரையபி  நவைசிவை  சாம்ப  வீயுமை 
யகிலமு  மருளரு  ளேய்ந்த  கோமளி 
பயிரவி  திரிபுரை  யாய்ந்த  நூல்மறை  ......  சதகோடி 
பகவதி  யிருசுட  ரேந்து  காரணி 
மலைமகள்  கவுரிவி  தார்ந்த  மோகினி 
படர்சடை  யவனிட  நீங்கு  றாதவள்  ......  தருகோவே 
குரைகடல்  மறுகிட  மூண்ட  சூரர்க 
ளணிகெட  நெடுவரை  சாய்ந்து  தூளெழ 
முடுகிய  மயில்மிசை  யூர்ந்து  வேல்விடு  ......  முருகோனே 
குலநறை  மலரளி  சூழ்ந்து  லாவிய 
மயிலையி  லுறைதரு  சேந்த  சேவக 
குகசர  வணபவ  வாய்ந்த  தேவர்கள்  ......  பெருமாளே. 
  • நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய இள முலை
    வரிசையாய் அமைந்த ரத்தின அணி கலன்கள் நிறைந்ததாய், மிக்கெழுந்ததாய், கஸ்தூரி சந்தனம் அகில் இவைகளின் சாந்து சேர்ந்துள்ள இள முலைகள்
  • உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து
    மார்பின் மேல் அணைந்து நல்ல மலர்ப் படுக்கையின் மேல் இடுப்பில் உள்ள ஆடை தளர்ந்து (தரையில்) விழுந்திட,
  • மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர
    நல்ல சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வு எழ, கண்கள் பாய்ந்து நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு சண்டை செய்ய, இரண்டு கைகளில் அணிந்த பெரிய வளையல்கள் ஒலி மிகச் செய்ய,
  • விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது இயல்பொடு பருகிய வாஞ்சையே த(க்)க இயல் நாடும் வினையனை
    நறு மணம் உள்ள மலர்கள் நிறைந்த கூந்தல் சரிவுற்று, (கால்களில் உள்ள) சிலம்பு ஒலி செய்ய, இலவ மலர் போன்ற சிவந்த வாயிதழை முத்தமிட்டு வாயிதழின் அமுதம் போன்ற ஊறலை முறையே பருகும் விருப்பத்தையே தக்க ஒழுக்கமாகத் தேடும் வினைக்கு ஈடானவனை,
  • இரு வினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போ(கு)ம் மதி இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே
    நல்வினை தீவினை என்பவற்றில் இப்பிறப்பிலும் ஆழ்ந்த கடல் போன்ற துன்பப் படுகின்ற நீர்ச்சுழியான தீக் குணத்தில் தாழ்ந்து போகின்ற என் புத்தி நல்ல கதியைப் பெறுமாறு உனது திருவருளைப் பெற்று வாழ்வதும் ஒரு நாள் கிடைக்குமோ?
  • பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி பயிரவி திரி புரை ஆய்ந்த நூல் மறை சத கோடி பகவதி
    பரா சக்தி, சிவத்தினின்று பிரிவு படாதவள், சிவன் தேவி, சம்புவின் சக்தி உமை, எல்லா உலகங்களையும் அருளிய அருள் கொண்ட அழகி, அச்சம் தருபவள், மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள், நூற்றுக் கணக்கான நூல்களும், உபதேச ரகசியப் பொருள்களும் ஆய்ந்துள்ள பகவதி,
  • இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே
    சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களும் தரிக்கின்ற மூல தேவதை, இமய மலை அரசன் மகள் கெளரி, பல உருவினவளான அழகி, படர்ந்த சடையை உடைய சிவபெருமானது இடது பாகத்தில் நீங்காது விளங்கும் பார்வதி தேவி பெற்ற தலைவனே,
  • குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே
    ஒலிக்கின்ற கடல் கலங்க, கோபம் பொங்கி எழுந்த சூரர்களின் படைகள் அழிய, பெரிய கிரெளஞ்ச மலை வீழ்ந்து பொடிபட, வேகமாகச் செல்லும் மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே,
  • குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே.
    நல்ல தேன் உள்ள மலர்களில் உள்ள வண்டுகள் சூழ்ந்து உலாவும் மயிலாப்பூரில்* வீற்றிருக்கும் முருகனே, வீரம் வாய்ந்த குகனே, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, பொருந்திய தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com