தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்
வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
- திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
அலைகள் கொண்ட நீண்ட கடலால் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு - திரிவேனுனையோதுதல் திகழாமே
உன்னை ஓதிப் புகழ்தல் இன்றித் திரிகின்றேன். - தினநாளுமுனேதுதி மனதார பினே
நாள்தோறும் முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று, அப்படிப்பட்ட மனம் வாய்த்த பின்னர், - சிவசுதனே திரிதேவர்கள் தலைவா
சிவகுமாரனே, மும்மூர்த்திகளின் தலைவனே, - மால் வரைமாது உமையாள் தரு மணியே
இமயமலை மாதரசி உமையாள் பெற்ற மணியே, - குகனேயென அறையா அடியேனும் உன் அடியாராய்
குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் - வழிபாடு உறுவாரொடு அருளா தரமாயிடு
வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற - மகநா ளுளதோ சொல அருள்வாயே
விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக. - இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும்
தலைமையான யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள் அனைவரும், - இழிவாகி முனே இயல் இலராகி
தாழ்ந்த நிலையை அடைந்து, முன்னர் தமது தகுதியை இழந்தவராகி, - இருளா மனதேயுற அசுரேசர்களேமிக
மயக்க இருளடைந்த மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும் - இடரே செயவே அவர் இடர்தீர
துன்பங்கள் செய்யவே, அந்த தேவர்களது துயரம் நீங்க, - மறமா அயிலேகொடு வுடலே யிருகூறெழ
வீரமிக்க சிறந்த வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட, - மதமா மிகுசூரனை மடிவாக
ஆணவமிக்க சூரனை, அவன் மாமரமாக உருமாறினும், அழித்து - வதையே செயுமாவலி யுடையாய்
வதை செய்த பெரும் வலிமையை உடையவனே, - அழகாகிய மயிலா புரிமேவிய பெருமாளே.
அழகு வாய்ந்த மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.