தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண ...... வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
- கடிய வேக மாறாத விரத சூதர் ஆபாதர்
கடுமையான கோபம் குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள், - கலக மேசெய் பாழ்மூடர்
கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்கள், - வினைவேடர்
தீவினையையே விரும்புவோர்கள், - கபட வீனர்
வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள், (இத்தன்மையருடைய) - ஆகாத இயல்பு நாடியே
நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, - நீடு கன விகாரமே பேசி
மிக மோசமான அவலட்சணங்களையே பேசி - நெறி பேணாக் கொடியன்
நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய நான் - ஏதும் ஓராது
எதையும் ஆராய்ந்து பார்க்காமல், - விரக சாலமேமூடு குடிலின்
வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய - மேவியே நாளு மடியாதே
உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல், - குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும்
விளங்கும் மயிலின் மீது ஆறுமுகங்களும், வேலும், - ஈராறு குவளை வாகும்
பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த தோள்களும், - நேர்காண வருவாயே
அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர் எதிரே வருவாயாக. - படியி னோடு மாமேரு அதிர வீசியே
பூமியோடு, பெரிய மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, - சேடபணமும் ஆடவே நீடுவரைசாடி
ஆதிசேஷனின் பணாமகுடங்கள் அசைவுறவும், பெருமலைகளை மோதி, - பரவை யாழி நீர்மோத
பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும், - நிருதர் மாள வானாடு பதியதாக
அசுரர்கள் இறக்கவும், தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும், - வேலேவு மயில்வீரா
வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, - வடிவுலாவி யாகாச மிளிர்
அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை ஓங்கி மிளிரும் - பலாவின் நீள்சோலை
பலா மரங்களின் பெரிய சோலைகளும், - வனச வாவி பூவோடை வயலோடே
தாமரைக் குளமும், நீர்ப் பூக்கள் நிறைந்த ஓடைகளும், வயல்களும், - மணிசெய் மாட மாமேடை சிகரமோடு
அழகிய மாடங்களும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் - வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே.
ஒன்று கூடி விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே.