திருப்புகழ் 693 களபம் மணி ஆரம் (திருமயிலை)

தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
களபமணி  யார  முற்ற  வனசமுலை  மீது  கொற்ற 
கலகமத  வேள்தொ  டுத்த  ......  கணையாலுங் 
கனிமொழிமி  னார்கள்  முற்று  மிசைவசைகள்  பேச  வுற்ற 
கனலெனவு  லாவு  வட்ட  ......  மதியாலும் 
வளமையணி  நீடு  புஷ்ப  சயனஅணை  மீது  ருக்கி 
வனிதைமடல்  நாடி  நித்த  ......  நலியாதே 
வரியளியு  லாவு  துற்ற  இருபுயம  ளாவி  வெற்றி 
மலரணையில்  நீய  ணைக்க  ......  வரவேணும் 
துளபமணி  மார்ப  சக்ர  தரனரிமு  ராரி  சர்ப்ப 
துயிலதர  னாத  ரித்த  ......  மருகோனே 
சுருதிமறை  வேள்வி  மிக்க  மயிலைநகர்  மேவு  முக்ர 
துரகதக  லாப  பச்சை  ......  மயில்வீரா 
அளகைவணி  கோர்கு  லத்தில்  வனிதையுயிர்  மீள  ழைப்ப 
அருள்பரவு  பாடல்  சொற்ற  ......  குமரேசா 
அருவரையை  நீறெ  ழுப்பி  நிருதர்தமை  வேர  றுத்து 
அமரர்பதி  வாழ  வைத்த  ......  பெருமாளே. 
  • களபம் மணி ஆரம் உற்ற வனச முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும்
    கலவைச் சாந்தும் மணி மாலையும் கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும், குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன் செலுத்திய அம்புகளாலும்,
  • கனி மொழி மி(ன்)னார்கள் முற்றும் இசை வசைகள் பேச
    இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட மாதர்கள் அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும்,
  • உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும்
    சேர்ந்துள்ள நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும்,
  • வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த(ம்) நலியாதே
    செழுமை கொண்ட, விரிந்த மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும் இப்பெண் மடலேற* விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல்,
  • வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும்
    ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம் வெற்றி பெற இந்த மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன்.
  • துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயிலதரன் ஆதரித்த மருகோனே
    துளசி மாலை அணிந்த மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற முராரி, ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற மருகனே,
  • சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா
    வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய திருமயிலையில்** வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய, தோகையுடைய பச்சை மயில் ஏறும் வீரனே,
  • அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
    அளகாபுரி நகரத்துச் செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த (பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே,
  • அரு வரையை நீறு எழுப்பி நிருதர் தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே.
    அருமையான கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப் பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com