தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த ...... விலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த ...... குமரேசா
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
- இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு
தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு - இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி
இரண்டு காதுகளின் மேலே நெருங்கிப் போர் தொடுத்து, - இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு
நயனர்
விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், - வார் இணங்கும் அதி பாரம் பணை முலையின் மீது அணிந்த
தரள மணி ஆர்
கச்சணிந்த அதிக பாரமான பெரும் மார்பகங்களின் மீது முத்து மாலை அணிந்தவர்களும், - துலங்கு பருவ ரதி போல வந்த விலை மானார்
விளங்கும் இளமை வாய்ந்த (மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள் - பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படு
குழியிலே மயங்கி விழலாமோ
மேற்கொள்ளும் தொழிலில் நான் சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை என்னும் பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? - கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப
மயில் மேல் உகந்த குமரேசா
கண கண என்ற ஓசையோடு ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமரேசா, - கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ
வேல் எறிந்த முருகோனே
கோபித்து வந்த சூரனுடைய உடல் இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன் அலறி விழும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, - மணி மகுட(ம்) வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த
மலைய வி(ல்)லின் நாயகன் தன்
அழகிய முடியாகிய சடையில், கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள, (மேரு) மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது - ஒரு பாக மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே
வளர்ந்து
ஒரு பாகத்தில் உள்ள, மலை அரசனாகிய பர்வத ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி வளர்ந்து, - மயிலை நகர் வாழ வந்த பெருமாளே.
திருமயிலைத்தலம் சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.