திருப்புகழ் · 686கரிய முகில் போலும் (திருவொற்றியூர்)

kariyamugilpOlum

தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
களபமுலை தோய ...... அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா
சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
திகழ்கநக மேனி ...... யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர்
    கரு நிறமான மேகத்தைப் போன்று இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும் உடைய விலைமாதர்களின்
  • கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய
    காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய,
  • அணை ஊடே விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என
    படுக்கையில் காம சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று என்னை
  • நாளும் உலகோர்கள் விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள் தாராய்
    நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப் பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக.
  • அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே அதிக நடராஜர் பரவு குரு ராஜ
    திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே,
  • அமரர் குல நேச குமரேசா
    தேவர் குலத்துக்கு அன்பனே, குமரேசனே,
  • சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர்
    பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய சிவ பெருமான் வீற்றிருக்கும்
  • திரு அருளும் ஆதி புரி தனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே.
    செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits