திருப்புகழ் 679 பாற்றுக் கணங்கள் (பாக்கம்)

தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக்  கணங்கள்  தின்று  தேக்கிட்  டிடுங்கு  ரம்பை 
நோக்கிச்  சுமந்து  கொண்டு  ......  பதிதோறும் 
பார்த்துத்  திரிந்து  ழன்று  ஆக்கத்  தையுந்தெ  ரிந்து 
ஏக்கற்  றுநின்று  நின்று  ......  தளராதே 
வேற்றுப்  புலன்க  ளைந்து  மோட்டிப்  புகழ்ந்து  கொண்டு 
கீர்த்தித்  துநின்ப  தங்க  ......  ளடியேனும் 
வேட்டுக்  கலந்தி  ருந்து  ஈட்டைக்  கடந்து  நின்ற 
வீட்டிற்  புகுந்தி  ருந்து  ......  மகிழ்வேனோ 
மாற்றற்  றபொன்து  லங்கு  வாட்சக்  கிரந்தெ  ரிந்து 
வாய்ப்புற்  றமைந்த  சங்கு  ......  தடிசாப 
மாற்பொற்  கலந்து  லங்க  நாட்டச்  சுதன்ப  ணிந்து 
வார்க்கைத்  தலங்க  ளென்று  ......  திரைமோதும் 
பாற்சொற்  றடம்பு  குந்து  வேற்கட்  சினம்பொ  ருந்து 
பாய்க்குட்  டுயின்ற  வன்றன்  ......  மருகோனே 
பாக்குக்  கரும்பை  கெண்டை  தாக்கித்  தடம்ப  டிந்த 
பாக்கத்  தமர்ந்தி  ருந்த  ......  பெருமாளே. 
  • பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு
    பருந்துகளின் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு,
  • பதி தோறும் பார்த்துத் திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்று நின்று தளராதே
    ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று தளராமல்,
  • வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டிப் புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் வேட்டு
    மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே பாடிப் பாடி உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி,
  • கலந்து இருந்து ஈட்டைக் கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ
    உன்னோடு கலந்திருந்து வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து மகிழ்ச்சி உறுவேனோ?
  • மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்பு உற்று அமைந்த சங்கு தடி சாப(ம்) மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன்
    உரை மாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதர்சனம் என்னும்) சக்கரமும், தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கமும், (கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்) வில்லும், அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக வைத்துள்ள திருமாலை,
  • பணிந்து வார்க் கைத்தலங்கள் என்று திரை மோதும் பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன் தன் மருகோனே
    வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதிசேஷன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே,
  • பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே.
    கமுக மரப் பாக்கையும் கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com